அரசியல் கைதிகளைச் சந்தித்தனர் சுமந்திரன், செல்வம், மனோ, வேலுகுமார்!

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று புதன்கிழமை சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சயந்தன், அஸ்வின் ஆகியோர் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

sumantheran

“உங்களின் விடுதலைக்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றோம். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்மூலம் உங்களுக்கு ஒரு தீர்வு கிடைத்தே ஆகவேண்டும். உங்கள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அரசின் உயர்மட்டத்துடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளது” என்று கைதிகள் முன்னிலையில் கூட்டமைப்பு எம்.பிக்கள் இதன்போது தெரிவித்தனர்.

இதேவேளை – கண்டி, பல்லேகல தும்பர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார். அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதுடன், தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் வேலுகுமார் எம்.பி. எடுத்துள்ளார்.

தும்பர சிறைச்சாலையில் 13 தமிழ் அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. “நாங்கள் எவ்வித விசாரணைகளுமின்றி நீண்டநாட்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். மொழிப்பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தில் என்ன நடக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியாமல் உள்ளது. ஆகவே, விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு எங்கள் பிரச்சினைக்குத் துரிதமாக தீர்வுகாணப்பட வேண்டும். எங்கள் விடுதலைக்குரிய அதிகாரிகள் பொறுப்பேற்கும்வரை போராட்டம் தொடரும்” என்று வேலுகுமார் எம்.பியிடம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தேசிய கலந்துரையாடல் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் நேற்று மாலை மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். அவர்களின் விடுதலைக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related Posts