அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்த பிரேரணை, தீர்மானமாக மாற்றப்பட்டு ஜனாதிபதி, துறைக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் எதிர்க் கட்சி தலைவர் ஆகியோருக்கு மின்னஞசல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் இன்றைய 107 ஆவது அமர்வில் இது குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இராசதுரை திருவரன், மதியழகன் சுலக்சன் மற்றும் கணேசன் தர்சனன் ஆகிய மூவரும் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் தொடர்பான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் மாற்றியுள்ளது.
இதற்கு எதிர்பை தெரிவித்து குறித்த மூன்று அரசியல் கைதிகளும் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இன்று வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.