அரசியல் கைதிகளுக்கு சாட்சியம் இல்லை

அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இல்லை. அதனாலேயே காலம் தாமதிக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசியல் உள்ளீடு இருக்கும் போது, சட்டமா அதிபரை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததென்றும் நீதி அமைச்சரின் கருத்தை முற்றாக மறுப்பதாகவும் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்ட நீதியமைச்சர் அரசியல் கைதிகளின் விடுதலை சட்டமா அதிபர் கையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காலம் எடுப்பதற்கான காரணம் அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் அங்கு இல்லை.அதனால் தான் அரசாங்கம் சாட்சியங்களை பெற முயற்சிக்கின்றது.சாட்சியங்களைப் பெற்றால் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்கினை பதிவு செய்ய கூடியதாக இருக்கும் என்றார்.

எனவே, அரசியல் ரீதீயாக கைதுசெய்யப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் அரசியல் ரீதியான தீர்மானத்தினைத் தரவேண்டும்.

அந்த தீர்மானம் எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts