“அரசு தம்மை விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில்”, உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
உண்ணாவிரதமிருப்பவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசுதான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை நேற்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிறைக் கைதிகளுடன் நீதியமைச்சர் பேச்சு நடத்தினார். இவ்வருட இறுதிக்குள் முடிவொன்றைப் பெற்றுக்கொடுப்பதாக அவர் உறுதியளித்தார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய சிறைக் கைதிகள், ஏனைய சிறைச்சாலையிலுள்ள கைதிகளுடன் பேச்சு நடத்தியபின்னரே முடிவைக் கூறமுடியும் என்று தெரிவித்தனர்.
விடுதலை செய்வோம் என்ற உறுதிமொழி வழங்கப்படாததால், ஜனாதிபதியிடமிருந்து ஒரு பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லை என்று கைதிகள் குறிப்பிட்டனர் என்று சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.