அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு சுமந்திரன் எதிர்ப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 17ஆம் திகதி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திய போது, எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னதாக முதலாவது குழு புனர்வாழ்வுக்காக அனுப்பப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு அளித்திருந்தது.

எனினும் கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமரின் அலுவலகத்தினால் இந்த முதலாவது குழுவில் இடம்பெறுகின்ற இருபது பேர் கொண்ட பெயர்ப்பட்டியல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டு, கைதிகளின் சட்டத்தரணிகளுக்கு அந்தத் தகவலை கொடுக்குமாறும் வேண்டிக்கொள்ளப்பட்டேன். அதனடிப்படியில் கைதிகளின் சட்டத்தரணிகளுக்கு அந்தத் தகவலை பரிமாறியிருந்தேன்.

அந்தப்பட்டியலோடு கொடுக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகள் ஏற்புடையதல்ல என்பதை எதிர்க்கட்சியின் சார்பில் வரவு – செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்ததை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது நான் பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் என்னோடு இது குறித்துப் பேசிய போது, இந்த நிபந்தனைகள் ஏற்புடையதல்ல என்பதை எடுத்துரைத்தேன். அதனைத் தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கும் இந்த விடயம் தொடர்பில் எனது நிலைப்பாட்டைக் கூறியிருந்தேன்.

இந்தப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்களில் ஒரு சிலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். இன்னும் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளவர்கள். ஆகவே, அப்படியானவர்கள் மீதுள்ள ஒவ்வொரு வழக்குகளிலும் இந்த நடைமுறை செயற்ப்படுத்தப்படாதவிடத்து அவர்கள் புனர்வாழ்வுக்காக வெளியிலே வருவது சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.

இந்தப் பட்டியலில் மூவர் மாத்திரமே ஒரு வழக்கை உடையவர்கள். அதனடிப்படையில் 85 பேரில் ஆரம்ப கட்டமாக மூவர் மாத்திரம் புனர்வாழ்வுக்காக விடுவிக்கப்படுவதனையும், இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” – என்று தெரிவித்துள்ளார்.

Related Posts