அரசியல் கைதிகளின் விடுதலையும், அவர்களுடைய உயிர்களும் இன்று தமிழ் மக்களின் கைகளில் இருக்கின்றது என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை எம். சக்திவேல் கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அனுராதபுரம் சிறைச் சாலையில் கடந்த 29 நாட்களாக 11 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர்.
அவர்கள் தனிப்பட்ட விடயங்களுக்காக போராட்டம் நடாத்தவில்லை. தமிழ் மக்களுடைய அரசியல் சார்ந்த விடயங்களுக்காக போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் தமிழ் மக்களுடைய அரசியல் சார்ந்த விடயங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்காற்றியமையால் அவர்கள் இன்று சிறைகளில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.
2015ம் ஆண்டு 9ம் மாதம் மகசீன் சிறைச்சாலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பல வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.
ஆனால் அந்த வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அரசின் மீதும், அவர்களுடன் ஒடிக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீதும் நம்பிக்கை இழந்த நிலையிலேயே அரசியல் கைதிகள் இன்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலையும், அவர்களுடைய உயிர்களும் இன்று தமிழ் மக்களின் கைகளில் இருக்கின்றது.” என அவர் கூறினார்.