அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் பண்டத்தரிப்பு சந்தியில் சுற்றுவட்டத்திற்கு அருகில் பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது தங்களை விரைவில் விடுதலை செய்யவேண்டும், என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த மாதம் 14 ஆம் திகதியளவில் அனுராதபுரம் சிறைச்சாலையில் எட்டு அரசியல் கைதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்ட உணவுத் தவிர்ப்புப் போராட்டமானது, தற்போது அனைத்து சிறைகளிலும் உள்ள அரசியல் கைதிகளும் இணைந்து முன்னெடுக்கப்படும் பாரிய போராட்டமாக விரிவடைந்துள்ள சூழலில், அவர்களின் கோரிக்கைகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவேண்டும், வருடக்கணக்காக முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த அரசியல் கைதிகளின் உயிர்களைக் காக்கவேண்டும், அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.