அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் நிறைவு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இன்று காலை இவர்கள் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தம்மை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை போன்றவற்றில் இருந்த அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இவர்களை நேற்று அமைச்சர் சுவாமிநாதன் சந்தித்துக் கலந்துரையாடியதை அடுத்து தமது போராட்டத்தை நிறைவு செய்ய கைதிகள் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட மேலும் எட்டு அரசியல் கைதிகளை நேற்று பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக 31 பேருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில், இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 39 அரசியல் கைதிகளுக்கு இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts