அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது! – 12 பேரின் உடல் நிலை மோசம்

தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேரின் உடல் நிலை மோசமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

14 சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

எனினும், இவர்களின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளையோ, முறையான வாக்குறுதிகளையோ எடுக்காத நிலையில், நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், கைதிகளின் உடல் நிலை பலவீனமடைந்து செல்வதால், நீராகாரத்தையேனும் அருந்தும்படி ஆலோசனை வழங்கினர். எனினும் கைதிகள் அதற்கு இணங்கவில்லை.

நேற்று நண்பகல் சிறைச்சாலை ஆணையாளர் ரோகண புஷ்பகுமார மகசின் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளின் நிலைமையைப் பார்வையிட்டார்.

அமைச்சர் மனோ கணேசனும் மகசின் சிறைச்சாலைக்கு நேற்று மாலை சென்று கைதிகளுடன் பேசினார். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றுமாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 35 தமிழ் அரசியல் கைதிகளையும் பார்வையிட்டனர்.

இதற்கிடையே, மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும், அரசியல் கைதிகளின் உறவினர்களும், நேற்று சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமது உறவுகளைப் பார்வையிட்டனர்.

இதற்கிடையே, உண்ணாவிரதமப் போராட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மகசின் சிறைச்சாலையில் நால்வரும் அனுராதபுர சிறைச்சாலையில் ஒருவருமாக, ஐந்து கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மகசின் சிறைச்சாலையில் மேலும் ஆறு பேரும் அனுராதபுர சிறைச்சாலையில் ஒருவருமாக ஏழுபேரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். மகசின் சிறைச்சாலையில் கே.தயாபரன், கே.சிவாஜி, ரி.நேசமுருகன், எஸ்.உமாகரன், பி.மனோகரன், சகாதேவன் ஆகியோரும், அனுராதபுரவில் கே.கோபிநாத்தும் உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, மூன்று நாட்களாக அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்ற போதிலும், சிறிலங்கா அரசாங்கம் தரப்பில் இருந்து பொறுப்பு வாய்ந்த எந்தப் பதிலும் வழங்கப்படாதுள்ளமை கைதிகள், உறவினர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் தமிழ் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts