அரசியல் காரணங்களுக்காக எமது மாகாணத்தின் அபிவிருத்தியை கைவிட முடியாது – கமலேந்திரன்

kamal_epdpவட மாகாணத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக எமது தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2010ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்திலிருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பேரில் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கே அதிகப்படியான விருப்பு வாக்குகளை மக்கள் வழங்கியிருந்தார்கள்.

அந்த ஆணைக்கே மத்திய அரசில் அந்தஸ்துள்ள மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும், இந்த மாகாணத்துக்கான அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த பாராளுமன்றத் தேர்தல்வரை இதுதான் நிலைமை.

இப்போது மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முதலமைச்சர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதால், இதுவரை ஆளுனர் வகித்த மாகாணத்தின் அபிவிருத்திக்குழுவுக்கான இணைத்தலைமைப் பதவியானது இனி முதலமைச்சருக்கே இருக்கும்.

முதலமைச்சரை அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதி அவர்கள் நியமித்து அதற்கான உத்தியோகபூர்வ கடிதமும் அனுப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் கட்டுமானப்பணிகள் யாவும் மகிந்த சிந்தனையின் வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே எமது வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருக்கே இச் சந்தர்ப்பத்தில் வாழ்த்து தெரிவிப்பதோடு,

மகிந்த சிந்தனையை பயன்படுத்தி எமது மாகாணத்தை அபிவிருத்தியாலும், மீள் கட்டுமானத்தாலும் தூக்கி நிறுத்தவேண்டிய யதார்த்தத்தை முதலமைச்சர் புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகின்றேன். ஆனால் கூட்டமைப்பினர் முதலமைச்சரை நடைமுறைச் சாத்தியமான பாதையில் செயல்படுவதற்கு விடுவார்களா? என்பதே அவருக்கு தடையாக இருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழலிலேயே நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதை எம்மால் புரிந்து கொள்ளமுடிகின்றது. இவ்வாறு நிலைமையைப் புரிந்து கொண்டு அரசியல் காரணங்களுக்காக எமது மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகள் முடக்கப்பட்டுவிடக்கூடாது என்பதாலுமே எமது தலைவர் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் என்ற ரீதியில் கூட்டங்களை நடத்தினார். உரிய அதிகாரிகளும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கினார்கள்.

ஏற்கனவே நாம் கூறியதுபோல் பிரதேச சபைகளும், மாகாண சபையும் செயற்படுவதற்கு முன்னமே நாம் அபிவிருத்திப் பணிகளை எமக்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தின் துணையோடு தொடங்கியவர்கள்.

எமக்கு மக்கள் ஆதரவு வழங்க முன்வந்ததையும், எமது அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுப் பணிகளையும் மக்கள் ஏற்றுக் கொண்டதையும் கண்டு, அஞ்சியே எமக்கு எதிராக உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். அந்தக் கால கட்டத்தில் இப்போது மக்கள் ஆணை பற்றிப்பேசியிருக்கும் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் எங்கே மண்டியிட்டுக் கொண்டிருந்தார் என்பதை அவர் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அவரும், அவர் சார்ந்தவர்களும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதை அவர் பகிரங்கப்படுத்தினால் அதை ஆராயலாம்.

மக்களிடம் தேர்தல் காலங்களில் ஆணைகளைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு, பின்னர் ஆணை வழங்கிய மக்களின் தலையில் மண்ணை வாரிப் போட்டுவிட்டு அடுத்த தேர்தல்வரை ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்து வீரப்பேச்சுக்கள் பேசி அறிக்கைவிடும் மகேந்திரனின் தலைவர்களைப் பார்த்தே அந்தக் கேள்வியை அவர் கேட்கவேண்டும். அபிவிருத்தி தேவையில்லை என்று ஆவேசம் பேசிய நீங்களும் உங்கள் தலைவர்களும் இப்போது வழமைபோல் வாக்குறுதியை மறந்து விட்டீர்களோ தெரியவில்லை.

தனது தோளிலே அரிசி மூடை சுமந்து அகதியாக நின்ற எமது மக்களுக்கு உணவளிக்க பாடுபட்ட எமது தலைவரைப் பார்த்து ஆணை பற்றியும், மக்கள் ஆணையை இழந்தவர் என்றும் கேள்வி எழுப்புவதற்கு நேற்று அரசியலுக்கு வந்த எந்தப் பிரகிருதிக்கும் அருகதை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

முதலமைச்சர் அவர்களே யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுள்ள நிலையில் மகேந்திரன் போன்றவர்கள் அரசியல் நாகரீகம் தெரியாமல் கருத்துச் சொல்லமுற்படுவது அநாகரீகமாகும்.

நன்றி
மக்கள் சேவையிலுள்ள

க.கமலேந்திரன்
எதிர்க்கட்சித் தலைவர்
வடக்கு மாகாண சபை

Related Posts