தமது நிலை குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத தலைவர்களுக்கு தமிழ் அரசியல் கைதிகள் அவசர கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளனர். நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாம் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டமை தொடர்பிலும், தமது விடுதலை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் அரசியல் கைதி ஒருவர் தெரிவித்தார்.
அத்தோடு, அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றி வருவதாக தெரிவிக்கும் கைதிகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கென அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தில் ஏனைய நீதிமன்றங்கள் போன்றே வழக்கு விசாரணைக்கான திகதி மட்டும் கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு அரசாங்கம் விசேட நீதிமன்றத்தினாலும் எமது வழக்குகளை துரிதப்படுத்தாது காலத்தை கடத்துவதாகவும் இதனால் தாம் விசனம் அடைவதாகவும் கைதி ஒருவர் குறிப்பிட்டார்.