அரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு : ஜனாதிபதி

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடனான சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதிர்காலத்தில் 3 படிமுறைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்கேற்ப பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரது பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி மாநாட்டினை நடாத்துதல், சர்வ சமய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் சர்வ மத மாநாட்டினை நடாத்துதல் மற்றும் இவ்விடயத்தில் ஆர்வத்துடன் செயற்படும் நாட்டின் கல்விமான்களினதும் புத்திஜீவிகளினதும் மாநாட்டினை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதன்மூலமாக முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு, விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் கொழும்பு, சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற சகவாழ்வு அமைப்புக்கள் மற்றும் தேசிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் சந்திப்பிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அணிகளாக ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதனால் மாத்திரம் நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, பிரிவினை மற்றும் வேற்றுமையினால் மக்களையும் நாட்டையும் வெற்றிகொள்ள முடியாததுடன் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பல பிரச்சினைகளையும் சிக்கலாக்க முயற்சிப்பவர்களுக்கு அவற்றைத் தீர்ப்பதற்கான ஆற்றல் கிடையாததுடன், ஒரே மேசையில் அமர்ந்து நாட்டைப் பற்றிய உண்மையான சிந்தனையுடன் சகல பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாட மகா சங்கத்தினருக்கும், ஏனைய சமயத் தலைவர்களுக்கும், புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்களுக்கும் தான் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மீண்டும் ஒரு முறை நாட்டில் வெடிச்சத்தங்கள் கேட்காமலிருக்கும் வண்ணம் செயற்பட வேண்டியது அனைவரதும் கடமையாகும் என்பதுடன் நியாயமான சமூகமொன்றில் சகலரது பொருளாதார நிலையையும் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சிறந்த சகவாழ்வு சங்கத்தினை பாராட்டி சான்றிதழும் இதன்போது ஜனாதிபதி வழங்கப்பட்டது.

வண. மஹகல்கடவர புண்ணியசார நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், சர்வ மத தலைவர்களும், அமைச்சர் மனோ கனேசன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பவுஸி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், தூதுவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Posts