அரசியல்வாதிகள் அரசியலுக்காக நடத்தும் உண்ணாவிரதம் போல அல்லாமல் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கபோகிறேன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல் என் 15 வயது மகனை மேசன் தொழிலாளி ஆக்கி ஒரு பாடசாலை சிறுவனின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார்.

உண்மையில் இங்கே நடப்பது நல்லாட்சி என்றால் என் கணவனை விடுதலை செய்யுங்கள். என் மகனின் எதிர்காலத்தை பாதுகாத்து கொடுங்கள். என தமிழ் அரசியல் கைதி ஒருவரின் மனைவி கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை ஒன்றினை விடுத்திருக்கின்றார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரணைகள் எவையுமில்லாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஜோசப் செபஸ்தியன் என்ற தமிழ் அரசியல் கைதியின் மனைவி ஜோசப் செபஸ்தியன் றீற்றா என்பவர் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

2013 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 11 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் எனது கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி கைது செய்தனர்.

அதன் பின்னர் கடந்த 4 வருடங்களாக எந்தவொரு விசாரணையும் இல்லாமல் எனது கணவன் சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றார். எதற்காக கைது செய்தீர்கள்? என் கணவன் மீது என்ன குற்றச்சாட்டு சுமத்தியுள்ளீர்கள் ? என கேட்டதற்கு ஒரு பதிலும் வழங்கவில்லை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால். காரணம் ஏற்கனவே சாட்சி இல்லாமல் குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் பிடித்து சிறையில் அடைத்தவர்களுக்கு சாட்சியை தேடுவதற்காக இந்த கைது நடைபெற்றது.

திருமணம் முடித்து 15 வருடங்கள் எனது கணவர் என்னுடன் இருந்தார். அவர் பயங்கரவாதி என எனக்கு தெரியவில்லை. அவருடைய பெற்றோருக்கும் தெரியவில்லை. ஆனால் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு மட்டும் தெரிந்து விட்டது. எனது கணவன் குற்றவாளி என்றால் அவர் செய்த குற்றம் என்ன? அவர் மீது 4 வருடங்கள் குற்றம் சுமத்தப்படாமை, வழக்கு தொடரப்படாமை எதற்காக? எனது கணவனை பயங்கரவாதியாக அடையாளப்படுத்தி சிறையிலடைத்த இந்த அரசாங்கம் எனது 15 வயது மகனை மேசன் தொழிலாளியாக மாற்றி குடும்ப பொறுப்பை ஒரு 15 வயது சிறுவன் மீது சுமத்தியிருக்கின்றது.

எனது கணவனை விடுதலை செய்யுங்கள் என கேட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ் அரசி யல்வாதிகள் என அனைவருக்கும் கடிதம் எழுதி களைத்துவிட்டேன். பலர் பதிலே தருவதில்லை. எனது கணவனை விடுதலை செய்து என் பிள்ளையின் எதிர்காலத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் அரசியல்வாதிகள் அரசியலுக்காக நடத்தும் உண்ணாவிரதம் போல அல்லாமல் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கபோகிறேன். என கண்ணீர்மல்க கூறினார்.

Related Posts