அரசியல்வாதிகளே நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றனர்: சுவாமிநாதன்

சுயநல அரசியல்வாதிகளினாலேயே நாட்டில் நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று(திங்கட்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,

‘நாட்டின் நல்லிணக்கம் வரலாற்று தொடக்கம் சீராக காணப்பட்டாலும் சுய இலாபத்திற்காக அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துகளின் விளைவாகவே இலங்கையில் நல்லிணக்கம் சீர்குலைகின்றது.

ஆகவே இந்த சூழலை நாம் மாற்றி அமைக்க வேண்டும். இல்லையேல் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போகும்.

என்னுடைய ஒத்துழைப்பினால் இரு விகாரைகள் நிர்மாணிப்பதற்கு உதவி கரம் நீட்டியுள்ளேன். அதுபோன்று நாட்டில் வாழும் பெரும்பான்மையானோர் சகவாழ்வுடன் வாழ வேண்டும்.

மனிதர்கள் யாவரும் தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும். தர்மத்தை வழிதவறவிட்டு சென்றோமானால் நல்லிணக்கம் பாதிப்புறும்’ என தெரிவித்துள்ளார்.

Related Posts