யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை நான் அரசியல்வாதிகளின் காலில் வீழ்ந்துதான் பெற்றுக்கொண்டேன் என்று யாழ். ஆயர் கூறியிருப்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று நிராகரித்திருக்கிறார் புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன்.
ஆயரின் கருத்தைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையிலேயே பேராசிரியர் சிறி சற்குணராஜாவுக்கு துணைவேந்தர் பதவியை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சில நாள்களின் முன்னர் பொது நிகழ்வு ஒன்றில் பேசிய யாழ். ஆயர் மேதகு ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் குறித்துக் காரசாரமாக விமர்சித்தார்.
‘‘பல்கலைக்கழகப் பேரவையால் முதலாவது நபராகத் தெரிவு செய்யப்பட்டவர் இருக்கத்தக்கதாக, அரசியல்வாதிகளின் கால்களில் போய் வீழ்ந்தவர் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இப்படி நியமனம் பெற்றவரை மாணவர்கள் மதிப்பார்களா? விரிவுரையாளர்கள் மதிப்பார்களா? கல்வியின் நிலை எங்கே போகிறது’’என்று காட்டமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார் ஆயர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் முதலிடத்தில் இருந்தவருக்குக் கிடைக்கவேண்டிய பதவியை நான் அரசியல்வாதிகளின் காலில் வீழ்ந்துதான் பெற்றுக்கொண்டேன் என அண்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டியிருந்தார்.ஆயரின் இந்தக் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
துணைவேந்தர் தெரிவுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் முதலாவது இடத்தில் பேராசிரியர் சற்குணராஜாவும் இரண்டாவது இடத்தில் நானும் இருந்தோம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அரச தலைவருக்கு எமது பெயர் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதேநேரத்தில் நாங்கள் பல்கலைக்கழகத்தில் இணைந்த காலத்திலிருந்து எமது செயற்பாடுகள் தொடர்பாகப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகளும் அரச தலைவருக்கு முன்வைக்கப்பட்டன. அந்த அறிக்கை முதலாமிடத்தில் இருந்தவருக்குப் பாதகமாகவும் எனக்குச் சாதகமாகவும் இருந்தமையால் முதலாம் இடத்தில் இருந்தவர் தட்டுப்பட்டு இரண்டாவதாக இருந்த எனக்குத் துணைவேந்தர் நியமனம் கிடைத்தது.
பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக இருந்த யாழ்ப்பாண ஆயருக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு முறைகள் தொடர்பில் விளக்கம் இல்லையா?முன்னைய காலங்களில் மூன்றாமிடத்தில் இருந்தவர்கள் துணைவேந்தராக நியமிக்கப்படும்போது அவர் அமைதியாக இருந்தது ஏன்?
ஒரு மதத்தின் குரு முதல்வராக இருந்து கொண்டு தரவுகளை ஆராயாமல் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மரியாதைக்குரியதல்ல. தனக்கு ஏற்ற வகையில் அவர் கருத்துக்களை முன்வைப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் -என்றார்.
http://www.e-jaffna.com/archives/82167