அரசியல்வாதிகளின் அழுத்தமின்மையே காணிகள் விடுவிக்கப்படாமைக்கு காரணம்

அரசாங்கத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் குறைவாக இருக்கின்றமையே காணி விடுவிப்புக்கு தீர்வு கிடைக்காமைக்கான காரணம் என கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கடந்த காலத்தில் தொடர் போராட்டங்களை நடத்திவந்த மக்கள், உரிய தீர்வு கிடைக்காத நிலையில் நேற்று முதல் மீண்டும் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய தினம் இரண்டாவது நாளாக மக்களின் நில மீட்பு போராட்டம் தொடர்கின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணி உரிமையாளர் ஒருவரே மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றொரு காணி உரிமையாளர் தெரிவிக்கும் போது, தலைமைப்பீடங்களும் அதிகார வர்க்கத்தினரும் பிரித்தாளும் தன்மையை கைவிட்டுவிட்டு காணி விடுவிப்பு தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் நடைபெற்று வரும் இப் போராட்டத்தை ராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதோடு, அங்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களையும் ஒளிப்பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts