அரசியல்பதவி போட்டிக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மயங்கி கிடக்கிறது – டக்ளஸ்

douglas-devananda-parlimவரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் கலந்து கொண்டு ஆற்றிய உரை

கௌரவ சபாநாயகர் அவர்களே!….

மகிந்த சிந்தனை என்பது தேசமெங்கும் வறுமையை ஒழித்து
புதியதொரு வாழ்விற்கு வித்திடும் நாற்று! அபிவிருத்தியின் ஊற்று!!

இது,… மகிழ்ச்சி வெள்ளம் போல் எமது மக்களின் வாழ்விடங்கள் தோறும் பரந்து பாய வேண்டும் என்பதற்காக நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்.

குறிப்பாக புதிதாக மலர்ந்திருக்கும் வட மாகாண சபைக்கு இந்த அபிவிருத்தி நிதியை உரிய முறையில் பயன்படுத்தும் திட்டத்தை நாம் வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கான அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு ஊடாக ஆரம்பித்திருக்கின்றோம்.

ஆனாலும், நடந்து முடிந்த யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழு கூட்டங்களை வட மாகாண சபை முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்ளாமல் விட்டதை சகலரும் அறிவீர்கள்.

இது வட மாகாண மக்களின் கனவுகளுக்கு மாறான செயல் என்றே கருத வேண்டியுள்ளது.

தமக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை திட்டமிட்டு நிராகரிக்கும் வஞ்சகம் என்றே மக்கள் மீண்டும் உணரத்தொடங்கியுள்ளார்கள்.

ஆற்ற வேண்டிய பணிகள் எம்முன்னால் விரிந்து கிடக்கும் போது அரசியல் பதவி போட்டிக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மயங்கி கிடக்கிறது. யார்தான் ஒத்துழைப்பு வழங்க முன்வரா விடினும் நாம் எமது மக்களின் கனவுகளை நிறைவேற்றி வைப்போம்.

எமது மக்களின் வாழ் விடயங்களை அபிவிருத்தியால் தொடர்ந்தும் தூக்கி நிறுத்தும் பணிகளில் இருந்து நாம் ஓயப்போவதில்லை.

எமது வட பகுதி கடற்றொழிலாளர்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்போ, அன்றி அவர்கள் சார்ந்த வட மாகாண சபையோ மௌனம் காத்து வருகிறது.

இது குறித்து இந்திய அரசோடு அல்லது தமிழ் நாடு அரசோடு வட மாகாணசபை பேசியிருக்க வேண்டும்.

ஆனாலும் அவர்கள் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற தோரணையில் இரட்டை வேட நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள்.

எமது வட பகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து இந்திய அரசுடனும், தமிழ் நாடு மாநில அரசுடனும், தமிழக மீனவர் சங்க பிரதிநிதி களுடனும் உரிய முறையில் பேசி முடிவெடுக்க அரசாங்கத்தின் ஊடாக நான் முயற்சி செய்து வருவது தெரிந்ததே.

அரசாங்கம் இந்த ஏற்பாட்டை மேலும் விரைவு படுத்த வேண்டும்.

இதே போல், வட பகுதியில் எஞ்சியுள்ள எமது மக்களின் வாரலாற்று வாழ்விடங்களை அவர்களிடம் மீட்டுக்கொடுத்து அவர்களை நாம் மீள் குடியேற்றம் செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது குறித்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார்கள். இது தவிர எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேறி மகிழ்ச்சியாக வாழ்வதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பவும் இல்லை.

எந்தப்பிரச்சினைகளையும் தீராப்பிரச்சினையாக்கி, மக்களை தூண்டி விட்டு,அதில் அரசியல் நடத்துவதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுயலாப அரசியல்.

எம்மை பொறுத்த வரையில் மக்கள் எம்மோடு அதிகளவில் அணி திரண்டு வந்திருந்தால் சுலபமாகவே அவர்களை தொடர்ந்தும் மீள் குடியேற்றி முடித்திருப்போம்.

ஆனாலும், எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம். அந்த வகையில் நாம் ஐனாதிபதி அவர்களோடும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்களோடும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஐபக்ச அவர்களுடனும் பேசி எஞ்சியுள்ள எமது மக்கள் அனைவரையும் விரைவில் மீள் குடியேற்றம் செய்யவுள்ளோம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!….

மகிந்த சிந்தனை பற்றி சகலரும் அறிந்திருப்பீர்கள். மறு புறத்தில் இன்னொரு சிந்தனையும் உண்டு என்பதை நான் கூறி வைக்க விரும்புகின்றேன். அது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது சிந்தனை.

சுனா, மாவன்னா, சானா சிந்தனை என்பதுதான் (சு.மா.ச சிந்தனை) அதுவாகும்.

இதுவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிந்தனையாகும். சுத்து மாத்து சம்பந்தமான சிந்தனை என்பதுதான் அதன் கொள்கையும் செயலுமாகும்.

இவ்வாறு தனது உரையில் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்

Related Posts