அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்சவுடன் விசேட கலந்துரையாடல்!

அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று (28) விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டிருந்ததாக, விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல்கைதிகளின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட விசேட குழுவான பிரதியமைச்சர்கள் காதர் மஸ்தான், ச.வியாழேந்திரன், இ.அங்கஜன் ஆகியோர் இன்று நாமல் ராஜபக்ச எம்.பியையும், நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவையும் சந்தித்து பேசியுள்ளனர்.

அரசியல்கைதிகளை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென பரவலான கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த குழுவும் ஒரு தொகை அரசியல்கைதிகளையே விடுவிக்க, ஜனாதிபதியை பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

வழக்கு தாக்கல் செய்யப்படாமல், அதே சமயம் புனர்வாழ்விற்கு உட்பட சம்மதம் தெரிவித்தவர்களை, முதற்கட்டமாக புனர்வாழ்விற்கு உட்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழ்பக்கத்திற்கு தகவல் தந்த, குழுவின் அங்கத்தவரான பிரதியமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் கணிசமானவர்கள், தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்று, புனர்வாழ்வை கோரியிருந்தனர். அவர்களை விடுவிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளும் நடத்தியிருந்தது. எனினும், அரசியல்கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போது மறுப்பு தெரிவித்து வந்தார்.

அத்துடன், அரசியல்கைதிகளின் விடுவிப்பு முயற்சிகளிற்கு மஹிந்த அணி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Posts