ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்திய, நடிகர் கமலஹாசன்,
அரசியலில் குதிப்பது குறித்து விவாதித்துள்ளார். நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்குவதற் காக அல்ல, மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் அரசியல் என, கமல் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெ. மறைவை தொடர்ந்து, டுவிட்டரில், அதிரடி கருத்துகளை வெளியிட்டு வரும் கமல், மக்கள் பிரச்னைகள் குறித்தும் பேசி வருகிறார். இந்தச் சூழலில், கமல் ரசிகர் மன்ற புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதற்கு, கண்டனம் தெரிவித்த கமல், அவரை விடுவிக்கக்கோரி எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் அலுவலகத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் நேற்று கமல் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இந்த ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனையின் போது, கமல் பேசியதாக, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: கச்சேரியில் பாட்டு சரியில்லை என, குறை கூறுவதால், மேடைக்கு வந்து, என்னை பாடச் சொல்லக்கூடாது. நான் அறிக்கை விடுவது புதிதல்ல 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கருத்து கூறி வருகிறேன். இலங்கை பிரச்னைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தவன் நான்.இப்போது தான் நான் கூறுவது அவர்கள் காதில் விழ தொடங்கி உள்ளது.
நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது. நான் செய்யும் அரசியல், ஓட்டு வாங்கும் அரசியல் அல்ல; மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் அரசியல். யார் தவறு செய்தாலும், நாகரிகமான முறையில், அவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்யுங்கள்.
30 ஆண்டுகளாக எவ்வித இடையூறு இன்றி நடைபெற்ற ரசிகர் மன்ற பணி, இன்னும் சிறப்பாக, பெரிய அளவில் நடைபெற வேண்டும் நான் துணையிருப்பேன்.
இவ்வாறு கமல் பேசியதாக நிர்வாகிகள் கூறினர்.
அவர்கள் கூறுகையில், ஜெ., மறைவின் போது, சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என, கமல் கூறினார். அது, எவ்வளவு உண்மை என, இப்போது தெரிந்திருக்கும். கமலின் இந்த அதிரடி நடவடிக்கை, அவர் அரசியலுக்கு வருவதற்கான அஸ்திவாரம் தான். இது, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் அளிக்கும் என்றனர்.