நல்லாட்சி அரசு நிலைத்து இருப்பதன் ஊடாகவே புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கொழும்பு அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் புதிய ஆட்சி வர வேண்டும் என்பதற்காக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இரண்டு கட்சிகளும் இணைந்திருக்கின்றன இந்த நிலை தொடர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறான சவால்கள் ஏற்பட்டாலும் நல்லாட்சி தொடர வேண்டும் எனவும் தமிழர்களுக்கான நீதி கிடைக்கும் வகையில், அதற்கான ஒத்துழைப்பை வழங்க கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்திருந்தார்.