அரசின் மந்தகதிச் செயற்பாடு கடும்போக்காளர்களுக்கு உந்துசக்தியாக அமைகின்றது : இரா.சம்பந்தன்

அரசாங்கத்தின் மந்தகதியிலான செயற்பாடுகள் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும்போக்காளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உந்துசக்தியாக அமைகின்றது என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது அவர்களின் உறவுகள் திருப்தியடையும் வகையில் விரைவான விசாரணைகளை நடத்தவேண்டுமென வலியுறுத்தினார்.

அத்துடன் படையினரின் பாவனையிலுள்ள பொதுமக்களின் காணிகள் இன்னும் மீளளிக்கப்படாமல் இருக்கின்றமை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்ட சம்பந்தன் இம்மக்கள் காலங்காலமாக தாம் வாழ்ந்து வந்த இருப்பிடங்களை விடுவித்துத் தருமாறு நீண்டகாலமாகப் போராடி வருகின்றார்கள். இந்த நியாயமான கோரிக்கையைப் புறந்தள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதையும், இது இலங்கை அரசாங்கமானது சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் ஐரோப்பியத் தூதுவருடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கமானது விரைந்து செயற்படவேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related Posts