அரசின் பியர் வரிக்குறைப்பிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

இளைஞர்களை மது பாவனைக்கு தூண்டிவிடும் அரசின் பியர் வரிக் குறைப்பு யோசனைக்கு எதிர்ப்பு குரல் கொடுக்க ஒன்றிணையுமாறு யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மாவட்ட ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது. அதன்போது ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜர்களும் கையளிக்கப்படவுள்ளது.

சிவில் சமூக அமைப்புகள், யாழ் மாவட்ட ரீதியில் செயற்படும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பின் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் இணைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பியர் விலை குறைப்பு முயற்சியானது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இலகுவாக பியர் பாவனைக்கு தூண்டிவிட்டு, அடுத்தகட்டமாக முழுமையான மது பாவனைக்கு வழிவகுக்கும். எனவே எம்மவர்களின் நலன் கருதி அரசின் இந்த யோசனைக்கு எதிர்ப்பு குரல் கொடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

Related Posts