Ad Widget

அரசாங்க சேவையில் உள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் சேவைகளை வழங்க முன்வரவேண்டும் : ஜனாதிபதி

அரசாங்க சேவையில் உள்ளவர்கள் மக்களின் நன்மதிப்பை பெறும்வகையில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் தமது சேவைகளை வழங்க முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்க சேவையில் ஏதேனும் ஒரு துறை மக்களின் எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் உள்ளானால் அது தொடர்பில் அத்துறைகளின் தலைவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி தமது மனச்சாட்சிக்கு ஏற்ப நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் சேவைசெய்யும் அனைத்து அதிகாரிகளுக்காகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் சார்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மகாவலி குடியேற்றவாசிகளுக்கு ஒரு லட்சம் காணி உறுதிகள் வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விக்டோரியா மற்றும் கொத்மலை வலய விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்காக இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க சேவையில் காணித் துறையின் நடவடிக்கைகள் குறித்து நீண்ட காலமாக இந்நாட்டு மக்கள் மத்தியில் திருப்தியான ஒரு நிலை கிடையாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமையை கருத்திற்கொண்டு பிழைகளை சரிசெய்து இன்றைய நாளின் பணிகளைப் போன்று நாளைய தினத்தின் மக்கள் பணிகளையும் உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அனைத்து அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Posts