அரசாங்க உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

gov_logஅரசாங்க உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

இவ்வறிவித்தலை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதற்கிணங்க இதுவரை 57 வயதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதற்கிணங்க அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் 55 வயதுக்குப் பின் 60 வயது வரை இனி ஒவ்வொரு வருடமும் காலத்தை நீடிப்பதற்காக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அவர் 60 வயது வரை சேவையைத் தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே 55 வயதாகவிருந்த அரசாங்க உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொழில் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க 57 வயதாக அதிகரிக்கப்பட்டது. தற்போது 60 வயதாக இவ்வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 60 வயது வரை மட்டுமே இந்நீடிப்பு நடைமுறையிலிருக்குமென்றும் 60 ற்கு மேல் எவருக்கும் கால நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என்ற உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.

அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒருவர் 55 வயதில் ஓய்வு பெற முடியும். அவர் விரும்பும் பட்சத்தில் மூன்று மாத கால முன்னறிவித்தலை வழங்கி அவர் 60 வயது வரை சேவையில் நீடிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts