பொதுமக்களிடம் இருந்து அதிக வரிகளை அறவிடும் அரசாங்கம், பொதுமக்களின் பணத்தை சூறையாடி தாம் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் சனிக்கிழமை(27) தெரிவித்தார்.
மின்சார சபையின் மனித வள உத்தியோகத்தர்களின் நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி வடமாகாண மின்சார சபை தொழிற்சங்கத்தின் மாநாடு சனிக்கிழமை(27) யாழ. ரிம்பர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
மக்களிடம் அதிக வரிகளை அறவிடும் அரசு அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதில்லை. ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தனது மகனுக்கு வெளிநாட்டிலிருந்து காலணிகளை வாங்குகிறார். அதன் பெறுமதி ஒரு இலட்சத்து 50,000 ரூபாய். இதனால் அவர் ‘தான் ஒரு பெருமைக்குரிய தந்தை’ என்று பெருமிதம் கொள்கிறார். ஆனால் மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை.
மனித வள உத்தியோகத்தர்கள் நிரந்தர ஊழிய சேவையை நடாத்துகின்ற போதிலும் அவர்களுக்கு நிரந்தர ஊழிய சேவை கிடைக்கவில்லை. அவர்கள் முழுமையாக தம்மை அர்ப்பணித்தே இந்த சேவையை மேற்கொள்கிறார்கள்.
நிரந்தர ஊழியர்களால் மனித வள ஊழியர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்ற போதிலும் அவர்கள் மதிக்கப்படுவதில்லை.
இந்த அடிமைச்சேவையை உடன் முடிவுக்கு கொண்டு வரவேண்டும், அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டும் பகடைக்காய்களாய் மக்களைப் பயன்படுத்துகிறார்கள்.
அரசியல்வாதிகள் மக்களின் பணத்தில் சொகுசு வாழ்கை வாழ்கிறார்கள் ஆனால் வன்னி மக்கள் இன்றும் அன்றாட தேவையை பூர்த்தி செய்யமுடியாதவர்களாக உள்ளார்கள்.
இந்த இளைஞர்கள் ஈழம் கேட்கவில்லை, தனி நாடு கேட்கவில்லை, வேலையை நிரந்தரமாக்க கேட்கிறார்கள். என அவர் குறிப்பிட்டார்.