”தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அரசாங்கம் தருவதனை பெற்றுக்கொள்ள முடியாது. எமக்கு விருப்பமில்லாத தீர்வினை எம்மீது திணிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் இன்னும் 20 வருடங்களின் பின்னர் வடக்கு கிழக்கை சேராதவர்கள் வடக்கு கிழக்கை ஆட்சிசெய்ய, அவர்களின் கீழ் நாம் வாழும் நிலை ஏற்படும்” என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொழும்பில் வாழ்கின்றவர்கள் விரும்பும் தீர்வை, வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு, பக்தி இலக்கிய காலத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றுவதனை கைவிட்டு விட்டார்கள் என சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்களால் கைவிடப்பட்ட மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூறினார்.
இந்நிலையில், விரும்பினல் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கலாம் என்றும், ஆனால் வடக்கு கிழக்கில் சகல மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.