வடமாகாண சபைக்கும் மக்களுக்கும் வெளிநாட்டு சூழல், அயல்நாட்டு சூழல், உள்நாட்டு சூழல் என்பவை கரிசனை தந்துகொண்டிருப்பதால் அரசாங்க முக்கியஸ்தர்களை பொறுத்தவரையில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 64ஆவது ஆண்டு நிறைவும், 15ஆவது தேசிய மாநாடும் வவுனியா நகர கலாச்சார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,
காரணமில்லாமல், நல்லூர் முருகனின் திருவிழாக் காலத்தில், ‘இன்னும் இன்னும் வழங்குவேன், நீங்கள் முன்னேர வேண்டும். உங்கள் பிரதேசம் முன்னேர வேண்டும்’ என்று மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தான் படித்த தமிழில் கூறியிருக்கமாட்டார். இது அரசாங்கத்தின் குழப்ப நிலை.
ஒரேயொரு தீர்வு தான் உண்டு என்று அந்த இலக்கை நோக்கிச் செல்பவர்கள் அது கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மகாபாரதத்தில் அபிமன்யுவுக்கு நேர்ந்த கதிதான் நடக்க நேரிடும். வியூகத்தை உடைத்து உட்செல்ல அறிந்திருந்தவனுக்கு வெளியேவர வழி தெரியவில்லை. பலர் சேர்ந்து அவனைக் கொன்று விட்டனர்.
எனவே, மாற்றுவழியொன்றை மனதில் நிறுத்தாமல் எம் இளைஞர்கள் நுழைந்த பாதை இப்பொழுது எங்கே எங்களைக் கொண்டு வந்து விட்டிருக்கின்றது என்பதை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் போர் வெற்றி எப்பேர்ப்பட்ட ஒரு இயல்பை வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்வோமாக. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், வாழ்வாதாரங்கள் இன்றி வாடும் நிலை, போர் எம்மக்கள் மனதில் ஏற்றிய பயம், பீதி ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புநிலை, இராணுவ கட்டுப்பாட்டினுள் எம்மக்கள் இடருரும் நிலை, எம்மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் பிறமாகாணத்தில் இருந்து கொண்டுவந்து வேற்று மக்களைக் குடியிருத்தும் நிலை, 13ஆவது திருத்த சட்டத்தின் வலுவற்ற நிர்வாக நிலை, எமது சிறிது அளவான நிர்வாக அதிகாரத்தினுள்ளும் திவினெகும என்ற சட்டம் செய்துள்ள ஊடுருவல் நிலை போன்ற பலதையும் எதிர்நோக்கும் நிலையில் எம்மக்கள் உள்ளார்கள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி முதிய தலைவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைய மக்கள் தலைவர்களுடன் பகிராதிருப்பது எனக்கு ஒரு தளர்வு நிலையாகத் தோன்றுகின்றது. எவ்வாறு ஆயுதம் ஏந்தியவர்கள் தாம் இல்லாது போனால் பொதுமக்களுக்கு என்ன நடக்கும் என்று சிந்திக்காது போர் நடத்தினார்களோ, அதேபோல் எமது சிரேஷ்ட தலைவர்கள் தாங்கள் சடுதியாகப் போய்விட்டால் என்ன நடக்கும் என்று சிந்தித்துச் செயலாற்றுகின்றார்களா என்ற கேள்வி என் மனதில் பூதாகாரமாக இருந்து வருகின்றது.
அதே நேரத்தில் பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற மூத்த தலைவர்களை அணைத்துச் செல்லும் கட்சியின் பாங்கை நான் மெச்சுகின்றேன். தமிழரசுக் கட்சியில் பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வேண்டும்.
இலங்கை தமிழ் சமுதாயத்தினுள் பெண்களின் தொகை ஆண்களிலும் கூடியதே என்று நான் நம்புகின்றேன். எப்படியிருப்பினும் வடமாகாணத்தில் இது உண்மையே. எமது அரசியல் செயற்பாடுகளுக்கு பெண்களை சேர்த்துக் கொள்வது மிக முக்கியமாக எனக்குப்படுகிறது. நாங்கள் மறக்கக்கூடாது. இப்பொழுதும் அவர்களுள் பலர் எம்மிடையே வாழ்ந்து வருகின்றார்கள். பலர் வறுமையால் வாடுகின்றார்கள்.
மக்களை ஒருங்கிணைத்து ஒரு அஹிம்சை அரசியல் இயக்கமாக மாற்றுவதற்கு அவர்களின் பங்கு மிக முக்கியமானதாக அமையக்கூடும் என்று எனக்குப்படுகின்றது. உரிய உற்சாகத்தையும் அறிவுரைகளையும் பொருளாதார வளங்களையும் வழங்கினால், அவர்கள் நிச்சயமாக எமது மக்களின் ஈடேற்றத்திற்கு வழிவகுப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.
உரியவர்களை, உறவினர்களை, உற்றாரைப் பறிகொடுத்து நிற்கும் பெண்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் உணர்வுகளை எதிர்மறையாக பிரயோகிக்கவிடாது எமக்கு நன்மை தரக்கூடிய தன்னுறுதியுடைய பாங்காக மாற்றியமைத்து முன்னேற அவர்களை அரசியல் போராட்டத்தில், கட்சி விருத்தியில் ஈடுபடுத்துவது நன்மையை தரும்.
மக்களின் தேவைகளை அடையாளம் காணல், அவர்களுக்கான நிவாரணங்கள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயித்தல், அதற்கான உதவிகளில் ஈடுபடல் போன்ற பல விடயங்களில் பெண்கள் கட்சி சார்பில் ஈடுபடலாம்.
எனவே, பெண்களை எமது கட்சி நடவடிக்கைகளில் பெருவாரியாக சேர்த்துக் கொள்வதையும் பெண்கள் அணியை வலுவுடையதாக மாற்றுவதையும் நான் சிபார்சு செய்கின்றேன். எமது இளைய தலைமுறையினர் இயக்கக்கூடிய அரசியல் நோக்கத்தை இளைஞர் யுவதிகளுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு நான் சில இளைஞர் அணிகளுடன் சேர்ந்து சில பல சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றேன். இதுவரையில் அவை பயன் தருபவையாகவே மலர்ந்துள்ளன. இன்றைய இளைஞர்கள் புதிய புதிய சிந்தனைகளை வெளியிடுபவர்களாக காட்சியளிக்கின்றார்கள். அவர்களின் கணிணி அறிவு அதற்கு மெருகூட்டுகின்றது.
அரசியல் ரீதியாக மக்களை ஒன்று சேர்க்கவும், அரசியல் சிந்தனைகளை அவர்கள் மத்தியில் வலுப்பெற செய்யவும், வருங்காலம் பற்றிய சிந்தனைகள், வாழ்வாதார மேம்பாடுகள் பற்றிய சிந்தனைகள், பண்பாட்டு சூழல் பற்றிய சிந்தனைகள் போன்றவற்றை விருத்தியடைய செய்து மக்களிடையே கொண்டு செல்லவும் தமிழரசுக் கட்சி உதவி அளிக்க வேண்டும்.
வெறும் இளைஞர் அணிகளை உருவாக்கி விட்டு சும்மா இருப்பதில் பயன் இல்லை. அல்லது அவர்களுக்கு வன்னியில் இடம்பெற்று கொடுப்பதில் மட்டும் கரிசனை காட்டுவதில் பயனில்லை. அவர்களுக்கான கருத்தரங்கங்கள், பணிமனைகள், விவாதங்கள், கருத்துப்பரிமாறல்கள் என்று அறிவையும் அனுபவத்தையும் மேம்படுத்தும் திட்டங்களை தீட்டி உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அதே நேரம் அவர்களுக்கான பொருளாதார விருத்திக்கும் நாம் அடிசமைக்க வேண்டும்.
இராணுவத்தினர் எமது குடும்பங்கள் அனைவரையும் பற்றி சகல விபரங்களையும் கணிணியில்
உள்ளடக்கி வருகின்றார்கள். எம்முள் பலருக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது. கடந்த வெள்ளிக்கிழமை (05) தான் எமது உடல் கூறும் மொழி சம்பந்தமாக இராணுவம் ஆராய்ந்து வருவதைப் பற்றி ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
ஒருவர் இருக்கும் விதம், சிரிக்கும் விதம், முறைக்கும் விதம், கைகால்களை அசைக்கும் விதம் எல்லாவற்றையும் படம் பிடித்து எடுத்து அவற்றில் இருந்து அந்த மனிதரை எடைபோடக்கூடியதாக விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. இந்த கலையில் இஸ்ரேல் நாடுதான் முன்னணியில் நிற்கின்றது. எமது அரசாங்கம் அந்நாட்டுடன் சுமுகமான உறவினை பேணிப்பாதுகாத்து வருகின்றது. ஆகவே இராணுவம் வடமாகாணத்தில் இருந்து புல்லுத்தின்று கொண்டிருக்கவில்லை என்பதை எம்மக்கள் உணர
வேண்டும்.
எமது இளந்தலைவர்கள் தலைமையின் கீழ் எமது இளைஞர்கள் இராணுவம் பற்றிய சகல விபரங்களையும் சேகரிக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. எங்கெங்கே, எத்தனைபேர், எவ்வளவு ஏக்கர் நிலத்தில் இருக்கின்றார்கள், என்னென்ன வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள் போன்ற பல தரவுகளையும் பெற்றுக்கொடுக்க எமது மக்கள் குறிப்பாக இளைஞர், யுவதிகள் ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். எமது கட்சி முன்னர் போல் மேடைப் பேச்சுக்கள் பேசுவதுடன் இருந்துவிட முடியாது.
இளைஞர் யுவதிகளின் மனோநிலையைப் புரிந்து நடக்க முன்வரவேண்டும். இல்லையேல் எமது கட்சி பலவித சோதனைகளுக்கு உள்ளாகும் என்பது எனது கணிப்பு. இளைஞர்கள், தலைமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மையை இப்பொழுதே கோர தொடங்கி விட்டார்கள். அதற்கு நாம் இடமளிக்க வேண்டும். இன்று நாங்கள் தலைமைத்துவத்தை தம்பி மாவையிடம் ஒப்படைத்துள்ளோம். அவர் சூழலைப் புரிந்து கட்சியை முன்னெடுத்து செல்லக்கூடியவர்.
சமஷ்டி என்ற சொல் சிங்களவர் அகராதியில் தனித்து போதல் என்றே பொருள்படுகின்றது. நாட்டைப் பிரித்தல் என்றே அர்த்தப்படுகின்றது. ஒரு திரட்டப்பட்ட கம்பெனியில் சிறியதொரு கம்பெனி எவ்வாறு தனித்துவத்துடன் செயலாற்றுகின்றதோ அதேவகையில் வடகிழக்கு மாகாணங்கள் தம்மைத்தாமே நிர்வகிக்கும் முறையில் அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பதையே கடந்த 65 வருடகாலமாக நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம் என்பதை எடுத்துக் காட்ட வேண்டும். சமஷ்டி என்ற சொல்லை அரசியல்வாதிகள் சகதியாக்கியுள்ளனர் என முதலமைச்சர்
மேலும் தெரிவித்தார்.