அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராடுவோம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக திருப்திக்கொள்ள முடியவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இடம்பெற்றுள்ள இந்த அசாதாரண நிலைமைக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின், வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, பேராயர் இல்லத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அரசியல் தலைவர்களிடத்தில் நாம் விசேடமாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். நாட்டில் தற்போது அசாதாரண சூழ்நிலைமை ஏற்பட்டுள்ளமையால், அனைத்துத் தலைவர்களும் கட்சிபேதம் பாராது, ஒன்றாக செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய கட்சித் தலைவர்கள் ஒன்றாகக் கூடி இதுவிடயம் தொடர்பாக ஆராயவேண்டும்.

பாதுகாப்பு தொடர்பாக அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கலந்தாலோசிக்க வேண்டும். விசேடாக இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பாக எம்மால் திருப்தியடைய முடியாது. இந்த நாசகாரச் செயலுக்குப் பின்னால் யார் உள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

சிலரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்து பாதுகாப்புத் தரப்பினர் விடுவித்துவிடுகிறார்கள்.

இவ்வாறானவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பித்துச்செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எமக்கு இதுவிடயத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, இதன் பின்னணியில் இருக்கும் முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பித்து இருப்பார்களோ எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

அத்தோடு, இன்னும் கண்டுப்பிடிக்கப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. தீவிரவாதிகளுக்கான பொருட்கள் எவ்வாறு கிடைத்தன, இதற்கு உதவி செய்த அதிகாரிகள் யார்- என அனைத்தையும் விசாரிக்க வேண்டும்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்துள்ளதாக எமக்கு தெரியவந்துள்ளது. ஆனால், அந்த ஆணைக்குழு கூடி இதுதொடர்பாக ஆராய்ந்ததா- அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதா என்பது தொடர்பாக எமக்குத் தெரியாது.

இந்த ஆணைக்குழுவும் பழைய ஆணைக்குழுக்கள் போன்று இருக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் உரிய முறையில் கையாள வேண்டும்.

இவற்றை மேற்கொள்ளத் தவறினால், எமக்கும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, நாம் சட்டத்தை கையில் எடுக்காதவகையில், அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

முடிந்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அனைவரும் ஒரு அரசாங்கமாக ஒருங்கிணைந்தால் கூட சிறப்பாகத்தான் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Related Posts