அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு கூட்டமைப்பு தயாரில்லை – சிறிக்காந்தா

தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே என்.சிறிக்காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர், ”கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டிபய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தால் வெள்ளைவான் கடத்தல் ஆரம்பமாகும் என்று சொல்லி தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு இருந்தனர்.அதே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்போது கோத்தபாய அரசுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றனர்.

கோட்டாபய அரசாங்கம் தற்பொழுது வடக்குக்கும் கிழக்குக்கும் செயலனிகளை உருவாக்கி தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதனை பல தரப்புக்களும் கண்டித்து வருகின்றனர் இவ்வாறான ஒரு நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவரது அரசுக்கு ஆதரவு தருவோம் என கூறிவருகின்றனர். கூட்டமைப்பினர் கடந்த காலத்திலும் ஆட்சியிலிருந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி முண்டு கொடுத்து வந்தனர்.

தற்போது கோட்டாபய அரசாங்கத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால் தாம் அதனை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று பகிரங்கமாகவே கூறிவருகின்றனர்.

கோட்டாபய அரசாங்கம் 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி கொண்டு இருக்கின்ற போது அதற்கு ஆதரவு தருவோம் என்ற சமிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வெளிக்காட்டி வருகின்றது.

எம்மை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது. அவர்கள் அரச மாளிகைகளில் விருந்தினர்களாக உலா வருவதற்கு மட்டுமே விரும்புகின்றார்கள்.

கோட்டாபய அரசாங்கத்திற்கும் தாம் ஆதரவு வழங்குவதாக தற்போது கூறி வருகின்றமையானது இரட்டை நாக்கு அரசியலாகவே நாம் கருதுகின்றோம்.

கடந்த காலங்களில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் வெள்ளை வான் கடத்தல்கள் மீண்டும் ஆரம்பமாகும் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த கூட்டமைப்பு இப்போது அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றது எனவே தமிழ் மக்கள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.

Related Posts