அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதற்கோ நெருக்கடிக்குள் தள்ளவோ தயார் இல்லை – ஹக்கீம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கின்ற நான் இந்த நாட்டின் நீதியமைச்சராக பதவி வகிப்பது தொடர்பில் வெட்கமடைகின்றேன். மக்களின் விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் என்னால் பதிலளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நான் இருகின்றேன் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Rauff-Hakeem

எனினும் அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதற்கோ நெருக்கடிக்குள் தள்ளவோ நாங்கள் தயாராக இல்லை. அளுத்கம பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய இடங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை தடுப்பது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாததை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த விடயத்தில் அதிருப்தியுடன் இருக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகின்ற நடவடிக்கைகளிலேயே முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சியாக இருக்குமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

அசம்பாவிதங்கள் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நாசகார செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுமாறு மிகவும் காட்டமா முறையில் வலியுறுத்துகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அளுத்கம பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய இடங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களையடுத்து இன்று கொழும்பில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

Related Posts