ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்படி, இலங்கை வரவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் நேரில் வலியுறுத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான இணை அனுசரணையையும் இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்ததோடு அதனை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதாகவும் உறுதிமொழிகளை பகிரங்கமாகவே வழங்கியிருந்தது.
அவ்வாறான நிலையில் தற்போது அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குரிய இறுதிப் பொறிமுறையானது தீர்மானிக்கப்படவில்லை. அதேநேரம் தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போன்று விசாரணையின்போது பொதுநலவாய மற்றும் வெ ளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குரைனர்கள், விசாரணையாளர்கள் பங்கேற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் முன்னுக்குப்பின் முரண்பாடான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேநேரம் விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முழுமையாக திருப்தியளிப்பதாகவில்லை.
இந்நிலையிலேயே ஐ.நா.தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் முன்னெடுத்துள்ள விடயங்கள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் வருகை தருகின்றார். அவரை நேரில் சந்திக்கவுள்ள நாம் ஐக்கிய நாடுள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி கோரவுள்ளோம். அது மட்டுமன்றி எமது மக்கள் எதிர்நோக்கும் குறுகிய மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துக்கூறவுள்ளோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இவ்விடயங்களை கவனத்தில் கொண்டு தனது நடவடிக்கைளை முன்னெடுப்பார் என்ற அபரீதமான நம்பிக்கையுள்ளது என்றார்.