யாழ் பல்கலைக்கழகத்தின் இரு கலைத்துறை மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து பீடங்களின் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே.றஜீவன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஒரு மாத காலத்தில் நீதி கிடைக்காவிட்டால் மீண்டும் ஏதாவது ஒரு வழியில் பேராட்டத்தை ஆரம்பிப்பதாக அவர் கூறினார்.
கடந்த மாதம் 21ம் திகதி கொக்குவில், குளப்பிட்டி பகுதியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் (வயது 24) ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மாணவர்கள் தவிர்த்து வந்ததுடன், நிர்வாக பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளையும் முடக்கும் நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது மாணவர்களினால் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே.றஜீவன் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த விவகாரம் தொடர்பில், ஒருவார காலத்துக்குள் விசாரணையை முடிவுறுத்தி, குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதற்கு, நீதித்துறையிடம் கோரிக்கை முன்வைப்பதாக, ஜனாதிபதி உறுதியளித்ததாக மாணவர் ஒன்றியத் தலைவர் கே.றஜீவன் கூறினார்.
டிசம்பர் மாதம் 01ம் திகதி வரை அனைத்து போராட்டங்களையும் நிறுத்திவிட்டு கல்விச் செயற்பாடுகளை தொடர்வதாகவும், ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படா விடின் மீண்டும் போராட்டத்தை தொடரப் போவதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.