நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரும், எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் கைதுசெய்யப்பட்ட இவர்கள், அம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகம் ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் அம்பாந்தோட்டையில் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அம்பாந்தோட்டை நீதிமன்ற வளாகம், இந்திய துணை தூதரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாதென அம்பாந்தோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறியே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் 20இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டிருந்த அதேவேளை, நாமல் உள்ளிட்டோரை நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர், விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.