அரசாங்கத்திற்கான கூட்டமைப்பின் ஆதரவானது ஒரு இராஜதந்திரமே தவிர, அதனை அரசாங்கத்திடம் சோரம் போவதாக கூற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”உலக நாடுகள் எமது ஆயுத போராட்டத்தை மௌனிக்கச் செய்த பின்னர், தமிழ் மக்களின் இறைமை, உரிமை, விடுதலை என்பன சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது சுமத்தப்பட்டது.
நாங்கள் பல சந்தர்ப்பங்களில் பல விட்டுக் கொடுப்புகளை செய்துள்ளோம். ஆனால் நாம் ஒத்துழைக்கவில்லை என இந்த அரசாங்கமும் தங்களது நியாயப்பாட்டை சொல்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கின்ற காலக்கட்டத்தில் இருக்கின்ற காரணத்தினாலேயே சில சந்தர்ப்பங்களில் இந்த அரசாங்கத்திற்கு உதவி வருகின்றோம் என்பதே உண்மை” எனத் தெரிவித்தார்.