பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு, அரசாங்கத்தின் முன்மொழிவுகளை ஆராய்ந்து புதன்கிழமை வேலைநிறுத்தம் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்குமென கூறியுள்ளது.
‘இன்னும் இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. நடைபெறும் பேச்சுவார்த்தையில் திருப்தியான முடிவு கிடைக்குமாயின் மட்டுமே நாம் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவோம்’ என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் தேவசிறி கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவரை நாம் பின்வாங்கப்போவதில்லை. இருப்பினும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தில் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதத்தை கல்விக்கு செலவளித்தல் என்பதில் விட்டுக்கொடுப்பை செய்ய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனம் விரும்புகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதத்தை அரசாங்கத்தால் கல்விக்கு செலவளிக்க முடியாது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆனால் சங்கம் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்க்கின்றது
நாம் எமது கொள்கையை கைவிடவில்லை. கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை செலவளிப்பதற்காக நாம் தொடர்ந்தும் போராடுவோம்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எமது கோரிக்கைகள் பலவற்றுக்காக சாதகமான பதிலளித்தார். இருப்பினும் இன்னும் எழுத்து வடிவ ஒப்பந்தம் ஏற்படவில்லை.
கடந்த 3 மாத சம்பளத்துக்கான சம்பள நிலுவை வழங்கவும் ராஜபக்ஷ சம்மதித்துள்ளார். பல பாதகமான சுற்றரிக்கைகளை மீளப்பெற்றுக்கொள்ளல், சில விரிவுரையாளர்கள் மீது பழிவாங்கல் பற்றிய பிரச்சினையை தீர்த்து வைத்தல், கொள்கை ரீதியான வேறு தீர்மானங்கள் போன்ற விடயங்களுக்கு தீர்வு காண அமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்மதித்தார்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமது சம்பள பிரச்சினை தொடர்பாக பேசுவதற்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளன திறைசேரியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவை நேற்று சந்தித்தது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் சகோதர சங்கங்கள் நாளை கூடவுள்ளன. சங்கத்தின் நிறைவேற்றுக்குழு புதன்கிழமை இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளது.