அரசகரும மொழிக் கொள்கையை மீறினால் வழக்கு-அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவிப்பு

அரசகரும மொழிக் கொள்கையை உரியமுறையில் கடைப்பிடிக்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அரசகரும மொழிக்கொள்கையை மீறியுள்ள 75 அரச நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏனைய அரச நிறுவனங்கள் பற்றிய தகவல்களை திரட்டிவருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர் ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  அரசியல் ரீதியாக ‘செல்வாக்கு’ மிக்க அமைச்சுகளுக்கு, குறிப்பாக ஜனாதிபதிக்கு உட்பட்ட அமைச்சுகளின் அரச நிறுவனங்களுக்கு எதிராக இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது நடைமுறையில் கேள்விக்குறியே என்று அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மூத்த விரிவுரையாளருமான என்.பி.எம். சைஃப்டீன் தெரிவித்தார்.

அரசகரும மொழிக்கொள்கையை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றம் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என்கின்ற அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருக்கின்ற போதிலும், 2010 ஆம் ஆண்டுவரையான தனது 10 ஆண்டுகால பதவிக்காலத்தில் தமக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து எந்தவொரு வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts