புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அவ்வாறிருக்கும் போது இந்த நியமனம் செல்லுபடியாகுமா என்றும் அவர் கேள்வியெழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்வாறானதொரு கடிதம் தனக்கு கிடைக்கப் பெறவில்லை என்றார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்டசித் தலைவராக ஆர். சம்பந்தனை நியமிப்பதாக சபாநாயகர் அறிவித்து விட்டதாகவும் இனிமேல் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதனால் எந்தப் பயனும் இல்லை என்றார்.
அத்துடன் நேற்று பொலன்னறுவை கூட்டத்திற்கு சென்றிருந்த போது ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கதைத்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் உரையாற்றும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர்.
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க “அய்ஸே உட்காரு! குரங்குகள் போன்று செயற்பட வேண்டாம்” என்றும் முன்னைய பாராளுமன்றம் போன்று இனிமேல் பாராளுமன்றத்தை கொண்டு செல்ல இடமளிக்கப்பட மாட்டாது” என்றும் தெரிவித்தார்.