அம்ரேஷை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்த லாரன்ஸ்

பழம் பெரும் நடிகையான ஜெயச்சித்ராவின் மகன் அம்ரேஷ். ஜெயச்சித்ரா தன் மகனை பெரிய நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ‘நானே என்னுள் இல்லை’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். அப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. ஆனால் இப்படம் சரியாக ஓடாததால் நடிப்பை விட்டு விடவேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். இசை மீது கொண்ட ஆர்வத்தால் அப்படத்திற்கு அம்ரேஷே இசையமைத்திருந்தார்.

larance

தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருகிறார் அம்ரேஷ். இசையமைப்பாளராக மாறியது குறித்து அவர் கூறும்போது,

‘நானே என்னுள் இல்லை’ படத்திற்குப் பிறகு நடிக்கவே கூடாது என்று முடிவுக்கு வந்தேன். ஆனால், இசை மீது எனக்கு ஆர்வம் அதிகம். ஏ.ஆர்.ரகுமான், மணிசர்மா உள்ளிட்ட பலரிடம் நான் உதவியாளராக பணியாற்றியிருக்கிறேன்.

தயாரிப்பாளர் மூலம் எனக்கு ஒரு பட வாய்ப்பு வந்தது. நான் ஏதோ புதுமுக நடிகர் படத்திற்கு இசையமைக்க போகிறேன் என்று நினைத்தேன். கடைசியாக பார்த்தால் அது லாரன்ஸ் நடிக்கும் படம் என்று தெரிய வந்தது. உடனே சந்தோஷத்தில் எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப்போனேன்.

ஒருநாள் லாரன்ஸுடன் காரில் சென்றேன். அப்போது நான் இசையமைத்த பாடல் ஒன்றை அவருக்கு போட்டு காண்பித்தேன். எப்படியும் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று எண்ணினேன். சிறிது நேரத்தில் என் பாட்டை கேட்டு தாளம் போட ஆரம்பித்தார். பாராட்ட மட்டும் தான் என்று நினைத்தேன். என்னை பாராட்டி அனுப்பி விட்டார். மறுநாள் என்னை அழைத்து நீதான் படத்திற்கு இசையமைக்கிறாய் என்று சொன்னார். எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை, மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.

அதன்பிறகு லோக்கல் டிரெண்டில் பாடல் ஒன்று வேணும் என்று கேட்டார். அதற்காக நானே ஒரு பாடல் எழுதி பாடி இசையமைத்து காண்பித்தேன். பாடல்களை கேட்டுவிட்டு பாராட்டி, தான் அடுத்ததாக நடிக்கும் ‘நாகா’ படத்திற்கும் நீதான் இசையமைக்க வேண்டும் என்று கூறினார்.

இப்படங்களை அடுத்து பரத் நடிப்பில் உருவாகும் ஒரு படத்திற்கு இசையமைக்கவுள்ளேன்’ என்றார்.

Related Posts