அம்மா” உப்பு விற்பனை எங்களை பாதிக்கும்: தனியார் உப்பு உற்பத்தியாளர்கள்

தமிழக அரசு “அம்மா” உப்பு என்கிற பெயரில் செறிவூட்டப்பட்ட உப்பு விற்கத்துவங்கியிருப்பது தமிழ்நாட்டின் தனியார் உப்பு உற்பத்தியாளர்களை பாதிக்கும் என்கிறார் தமிழ்நாட்டின் சிறுதொழில் உப்பு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் பீட்டர் ஜெபராஜ்.

jaylalitha_amma_salt_

“அம்மா உப்பு” என்கிற பெயரில் தமிழக அரசு உப்பு விற்பனை திட்டம் ஒன்றை துவங்கியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா “அம்மா உப்பு” விற்பனையை துவக்கி வைத்தார்.

இரும்பு மற்றும் அயோடின் சத்துக்கள் கலந்த “இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு”, “குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு” மற்றும் “சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு” ஆகிய மூன்று உப்பு வகைகளை தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் முதல் வகை உப்பு ஒரு கிலோ இந்திய ரூபாயில் 14 ரூபாய்க்கும் (தனியார் நிறுவனங்களால் இது 21 ரூபாய்க்கு விற்கப்படுகிறது), இரண்டாவது வகை உப்பு ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் (தனியார் நிறுவனங்களால் 14 ரூபாய் முதல் 21 ரூபாய்க்கு விற்கப்படுகிறது), மூன்றாவது வகை உப்பு ஒரு கிலோ 21 ரூபாய்க்கும் (தனியார் நிறுவனங்களால் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது) தமிழக அரசு விற்கும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே “அம்மா உணவகங்கள்” மற்றும் “அம்மா குடிநீர்” திட்டங்களுக்கு அடுத்து தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டம் தான் “அம்மா உப்பு” என்றும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், தமிழக அரசின் இந்த உப்பு விற்கும் திட்டம் தமிழ்நாட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான தனியார் உப்பு உற்பத்தியாளர்களின் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை சரிபாதியாக குறைத்துவிடும் என்று தனியார் உப்பு உற்பத்தியாளர்கள் அச்சம் வெளியிட்டிருக்கிறார்கள்.

இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுதொழில் உப்பு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் பீட்டர் ஜெபராஜ், இதுவரைகாலமும் தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் தனது உப்பில் 95 சதவீதத்தை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே விற்று வந்ததாகவும், இன்று அந்த நிறுவனம் பொதுமக்களின் உணவுத்தேவைக்கு தனது தயாரிப்பை விற்கத்துவங்கியிருப்பதானது தங்களைப்போன்ற சிறுதொழில் செய்யும் தனியார் உப்பு உற்பத்தியாளர்களை பாதிக்கும் என்றும் அச்சம் வெளியிட்டார்.

எனவே தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் தங்களைப்போன்ற தனியார் உப்பு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து சாதாரண உப்பை வாங்கி அதை செறிவூட்டி பிறகு விற்றால் தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்க்கலாம் என்றும், இந்த கோரிக்கையை தமிழக முதல்வரிடம் தாங்கள் முன்வைக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

Related Posts