அம்பாறையிலுள்ள உணவகமொன்றில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் ஒருவகை மருந்து கலக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென இரசாயண பகுப்பாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொத்து ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மா திரண்டு கட்டியாக காணப்பட்டமையே, தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அம்பாறையில் உள்ள உணவகமொன்றில் தயாரிக்கப்பட்ட கொத்துரொட்டியில், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்பட்டிருந்ததாக தெரிவித்து அண்மைய நாட்களாக பல அசாதாரண நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டன. இந்நிலையில், குறித்த உணவு பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டபோது உண்மை வெளியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் வன்முறையை தோற்றுவிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் ஒரு குழுவினர் இவ்வாறு செயற்படுவதாகவும், கண்டி திகன பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னணியிலும் இக்குழுவினரே செயற்பட்டதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.