அம்பன் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் அடிப்படையில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த புயல் தாக்கத்தினால் பள்ளிக்குடாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், கௌதாரி முனையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரும், முழங்காவில் பிரதேச்ததில் 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேரும், கிராஞ்சியில் 6 குடும்பங்களைச்சேர்ந்த 24 பேரும், பொன்னாவெளியில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், இரணைமாதாநகர் கிராமத்தில் 1 குடும்பத்தை சேர்ந்த மூவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் 3 வீடுகள் முழுமையாகவு்ம, 2 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையமும், பூநகரி பிரதேச செயலகமும் மேற்கொண்டு வருவதாக பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தெரிவிக்கின்றார்.
இதேவேளை குறித்த புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக தற்காலிக வீடு சேதமடைந்துள்ளது. இதன்போது வீட்டில் தங்கியிருந்த 70 வயதான குடும்பஸ்தர் காயமடைந்த நிலையில் அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் 8 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இரவு வீசிய பலத்த காற்று காரணமாக கண்டாவளை பிரதேசத்தில் புன்னைநீராவி கிராமசேவையாளர் பிரிவில் 06 வீடுகளும், உமையாள்புரம் கிராமசேவையாளர் பிரிவில் 02 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி தேவைகள் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலகம் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. குறித்த புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலும் வீடுகள் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.