‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்- மாணவர் ஒன்றியம் உறுதி!

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக் கூறியுள்ளது.

அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலையே தூபி மீள கட்டப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைவிடுத்து, ‘அமைதி தூபி’ எனும் பெயரிலையோ அல்லது வேறு வடிவங்களிலோ தூபியை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சட்ட விரோதமானது எனக்கூறி பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவில் கடந்த மாதம் எட்டாம் திகதி இடித்தழிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டத்துடன், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த, எதிர்ப்பலையைத் தொடர்ந்து ஜனவரி 11ஆம் திகதி காலை தூபியை மீள அமைப்பதற்கு என துணைவேந்தர் தலைமையில் மாணவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் பின்னர், தூபி கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், தூபி விவகாரத்தில் நடைபெற்ற விடயங்களை விலாவரியாகக் குறிப்பிட்டு துணைவேந்தர் சிறிசற்குணராஜா அறிக்கை சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது அமைக்கப்படவுள்ள தூபியினை ‘அமைதி தூபி’ எனும் பெயரில் அமைக்க பேரவை அனுமதி அளித்துள்ள நிலையில், மாணவர் ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Posts