முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளை மீட்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் வடாமாகாண முதலமைச்சர் ஆகியோர் தலையிடுவதற்கு அமைச்சர் றிஷாட் பதியூதீன் தடையாக உள்ளார் என கூறியிருக்கும் வட மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், மேற்படி காணிகளை மீட்க முடியாமைக்காக அமைச்சர் றிஷாட் பதியூதீன் பதவி துறக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
வட மாகாணசபையின் 102 ம் அமர்வு நேற்று பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அஸ்மின் மேலும் கூறுகையில்,
மன்னார் மாவட்டத்தில் முசலி மற்றும் மடு பிரதேச செயலக பகுதிகளில் சுமார் 1 லட்சம் ஏக்கர் முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மாகாண சபையில் 2 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி குழு ஒன்றை நியமித்துள்ளார். அந்த விசாரணை குழு விசாரணைகளை நடத்தி 20.08.2017ம் திகதி அறிக்கை சமர்பிக்க உள்ளது. ஆனால் இந்த விசாரணை குழு மக்களின் கருத்துக்களை பெறவில்லை.
இதேபோல் மாகாணசபை இந்த விடயத்தில் தலையிடவில்லை. இதற்கு அமைச்சர் றிஷாட் பதியூதீனும் காரணம். குறிப்பாக இந்த விடயத்தை தானே செய்ய வேண்டும் என்பதால், மற்றைய முஸ்லிம் தலைவர்களையும், வட மாகாணசபை மற்றும் முதலமைச்சரையும் தலையிட விடாமல் தடுக்கிறார்.
ஆனால் அங்கே காணி அபகரிப்பினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவே அமைச்சர் றிஷாட் பதியூதீன் தன் பதவியை துறக்க வேண்டும், அல்லது அந்த காணிகள் பறிபோனமைக்கு அமைச்சர் பொறுப்பாளி ஆக வேண்டும் ஏன்றார்.