அமைச்சர் ராஜித மக்களின் உயிரோடு விளையாடுகிறார்: மருத்துவ அதிகாரிகள் சங்கம்

குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து வழங்க நடவடிக்கை எடுத்ததுபோல், குறைந்த விலையில் வைத்தியர்களை நியமித்து நோயாளிகளின் உயிரோடு விளையாட அமைச்சர் ராஜித முற்படுகிறார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சங்கத்தின் செயலாளர் நவீன் சொய்சா கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ பட்டத்தை வழங்க அதிகாரமுள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 31ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது.

நீதிமன்றத் தீர்ப்பை எமது சங்கம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், சரியான தகவல்களை அமைச்சர் நீதிமன்றத்துக்கு வழங்கத் தவறியதாலேயே அத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரின் பொறுப்பற்ற செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்நிலையில், ‘SAITM’ நிறுவனத்துக்கு மருத்துவ பட்டத்தை வழங்க முடியாது என அமைச்சர் பகிரங்கமாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் தொடர் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படும்.

குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து வழங்க நடவடிக்கை எடுத்ததுபோல் குறைந்த விலையில் வைத்தியர்களை நியமித்து நோயாளிகளின் உயிரோடு விளையாட அமைச்சர் முற்படுவதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

Related Posts