“தேசியம் பற்றி பேசுவது தவறல்ல.அதனை நான் மறுக்கவும் இல்லை.ஆனால் யாழ்ப்பான இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பையும்,மக்களின் அடிமட்ட பிரச்சினைகளையும், மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசுவதே எனது நோக்கம்.”
இவ்வாறு வடமாகாண சபை தேர்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் திரு. அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அவருடைய செவ்வியின் முழுவிபரமும் கேள்வி பதில் வடிவில் தருகின்றோம்.
1) சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்கால திட்டங்கள் எவை?
எங்களுடைய நோக்கம் மக்கள் சமுதாயத்தின் எழுச்சி என்பதேயாகும்.அதாவது முப்பது வருட கால அரசியல் போராட்டத்தினையும் , முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்த்தினையும் செய்து முடித்துவிட்டோம். ஆனால் கிடைத்தது எதுவுமே இல்லை. இந்நிலையில் எமது மக்களின் நாளாந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்து சமுதாயத்தின் எழுச்சியினை கட்டியெழுப்பி மீண்டும் எமது சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே எமது நோக்கம்.
குறிப்பாக 30, 35 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களுடைய இளைஞர்கள் தான் சகல துறைகளிலும் முன்னிலை வகித்தனர்.ஆனால் இன்று அந்த நிலை தலை கீழாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அந்த நிலைமையினை கொண்டு வருவதே என்னுடையதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியினதும் குறிக்கோளாகும்.
2) இம் முறையும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளீர்களா?
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமையே முடிவு செய்து கொள்ள வேண்டும். இது ஜனநாயக நாடு .எனவே அந்தக்கட்சிக்கு உரிமை உண்டு .இந்நிலையில் பிரிந்து கேட்பதா இல்லை இணைந்து கேட்பதா என்பதை அக்கட்சி முடிவு செய்து கொள்ளும்.
3) சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வடக்கு மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளராக எவ்வாறானவர்களை தெரிவு செய்கிறீர்கள். முன்னாள் போராளிகளை அதிகளவில் நிறுத்தப்படுவதாக பத்திரிகைள் கூறுகின்றன. அவை உண்மையா?
ஒரு மாதத்திற்கு முன்னர் பத்திரிகைகள் மூலம் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் வரலாற்றின் முதல் தடவையாக அதிகமானவர்கள் பதிவுசெய்தார்கள். குறிப்பாக கல்விமான்கள், வர்த்தகர்கள் என்பவற்றோடு சேர்த்து முன்னாள் போராளிகளும் அடங்குகிறார்கள். முன்னாள் போராளிகளை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நோக்கமாகும்.
4) முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் நிற்பதற்கு ஏதும் சாத்தியம் உண்டா?
அமைச்சர் பதவியிலோ முதலமைச்சர் பதவி மீதோ எனக்கு ஆசை இல்லை அது தொடர்பாக நான் பகல் கனவும் காணவில்லை. 2010ம் ஆண்டு அரசியலில் இறங்கினேன் இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோதும் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. ஆனாலும் அதற்குப் பிறகு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக இருந்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றேன். பதவியில் அமர்ந்தால் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றில்லை. ஆனால் தேர்தலில் வெற்றியீட்டுவோமாயின் இப்போது செய்து கொண்டிருப்பதைவிட இன்னமும் செய்வதற்ககான அதிகாரம் எமக்கு கூடியளவில் கிடைக்கும்.
5) வடமாகாணத்தின் முப்பத்தெட்டு ஆசனங்களில் உங்களால் எத்தனை ஆசனங்களை கைப்பற்றமுடியும்?
வடமாகாணம் முழுவதற்கும் 38ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 16 ஆசனங்கள் யாழ்ப்பாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது இதில் ஒன்பது ஆசனங்களை கைப்பற்றுவோம். இது கூட்டணி ஆட்சி என்பதால் எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன, எனினும் வடமாகாணசபையின் பெரும்பாலான ஆசனங்களை எம்மால் கைப்பற்ற முடியும் என்பதை கூறமுடியும்.
6) தமிழ் தேசியகூட்டமைப்பை முறியடிப்பதற்கு நீங்கள் என்ன உத்திகளை கையாளுகின்றீர்கள்?
யாரென்றாலும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதே எமது நோக்கம். எந்தக் கட்சியினையும் முறியடித்து வெற்றி கொள்வது என்பது எமது நோக்கமன்று. நாங்கள் எமது பணத்தை செலவுசெய்து எமது மக்களுக்கு சேவையாற்றிக்கொண்டிருக்கின்றோம். கடந்த மூன்றுவருட காலமாக அமைப்பாளராக இருந்து பல்வேறு சேவைகளையும் ஆற்றிவருகின்றேன். இத்தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் எமது மக்களுக்கு இன்னமும் செய்யமுடியும் அதற்காக இன்னொரு கட்சியினை தோற்கடிப்பதை இலக்காக கொள்ளவில்லை. மக்கள் தான் தமது பிரதிநிதிகள் யார் என்பதை தீர்மானிக்கப்போகின்றார்கள்.
7) 13வது சீர்திருத்தில் உள்ள காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்வது தொடர்பாக தற்போது சூடான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன இது தொடர்பாக உங்கள் கருத்து?
13வது சீர்திருத்த சட்டம் என்பது எம்மீது திணிக்கப்பட்ட ஒன்று இத்தீர்வினை இலங்கையர் என்ற ரீதியில் நாம் கொண்டுவரவில்லை. இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு மாகாணசபை அதிகாரங்கள் அதிகமாகின்றது. அமெரிக்காவிற்கோ இந்தியாவிற்கோ இது பொருந்தும் அவை பெரிய நாடுகள் இலங்கையில் அவை சாத்தியமாகாது.
இதில் உள்ள காணி மற்றும் பொலீஸ் அதிகாரம் கிடைத்தால் தமிழருக்கான குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களுக்கான உரிமைகள் கிடைத்துவிடும் என்கிறார்கள் அப்படியாயின் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கான உரிமை தொடர்பாக பேசுவது யார்? அவர்களுக்கு யார் பொறுப்பு கூறுவது. நாடு பூராகவும் உள்ள தமிழ் மக்களுக்கான உரிமைகள் வேண்டுமென்றே நான் கூறுகின்றேன். நாங்கள் தேசிய ரீதியிலான அரசியலில் ஈடுபடவேண்டும்
8) 13வது சீர்திருத்தத்தை ஒழிக்கக்கூடாது என்று அமைச்சர்கள் சிலரும் குரல் கொடுக்கின்றார்களே?
அது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட கருத்து அவர்களின் கருத்துரிமைக்கேற்ப கூறுகின்றார்கள். பொலீஸ் மற்றும் காணி அதிகாரம் என்பது வடக்குக்கு மட்டுமல்லவே அது நாடுபூராகவும் உள்ள மாகாணங்களுக்குமானது. அதேவேளை ஏனைய மாகாணங்கள் அதனை இல்லாது செய்வதற்கு ஆதரவு வழங்குகின்றது. குறிப்பாக மத்திய மாகாணம் தமக்கு காணி மற்றும் பொலீஸ் அதிகாரம் தேவையில்லை என்று கூறியிருக்கின்றது. வடமாகாணத்திற்கு என்று மட்டும் அதிகாரம் தரும்படி கேட்க முடியாது. தேசிய ரீதியில் அரசியல் செய்ய வேண்டும். அதைவிடுத்து எங்களுடைய மாவட்டம் எங்களுடைய மக்களோடையே இருந்தால் போதுமா? எங்களுடைய சமுதாயத்தை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு மத்திய அரசோடு இணைந்திருப்பதே சிறந்தவழி.
9)அண்மைக்காலமாக வேலைவாய்ப்புக்கள் வழங்குவதில் இரு கட்சிகள் முக்கியம் பெறுகின்றன. உண்மையில் யாருடைய முயற்சியின் கீழ் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன?
2010ம் ஆண்டு நான் அரசியலில் இறங்கியதிலிருந்து வேலை எடுத்து கொடுப்பதற்காக உதவிசெய்து வருகின்றேன். எங்களிடம் ஒரு புள்ளிவிபரம் இருக்கின்றது வேலையில்லா பட்டதாரிகள், வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தொடர்பான ஒரு தகவல்கோப்பு எங்களிடம் உண்டு இதனால் தகைமையில் அடிப்படையிலேயே வேலைகள் கொடுத்துவருகின்றோம்.
10) “நீங்கள் கூறுகிறீர்கள் தகைமையின் அடிப்படையில்தான் வேலைகள் கொடுக்கின்றோம் என்று ஆனால் சில அலுவலகங்களில் இருக்கும் அதிகாரிகளுக்கு வெளியில் இருக்கும் இளைஞர்களை விட தகைமை குறைவாகவே காணப்படுகின்றதே?
என்னைப் பொறுத்தவரைக்கும் பரீட்சையில் சித்தியடைந்து தகைமையின் அடிப்படையில்தான் வேலைவாய்ப்பை வழங்குகின்றேன். இதில் மற்றவர்கள் செய்கின்றதை என்னால் கூறமுடியாது. என்னுடைய முடிவு தகமையின் அடிப்படையிலேயே வேலை வழங்குவது. ஆரம்பத்தில் 2009ஆம் ஆண்டுவரை பட்டம் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்றிருந்தது. நான் நாமல் ராஜபக்சவுடன் பேசி 2012வரை மாற்றியுள்ளேன்.
எங்களுடைய யாழ் மாவட்டம் நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாமல் இருந்தது. 2006ல் உள்ளவர்களுக்கு கூட நியமனம் வழங்கப்படவில்லை. இவர்கள் திருமணம் முடித்து பிள்ளைகளையும் பெற்றுவிட்டனர் ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கொடுக்கப்பட்டிருக்கவில்லை, இருந்த போதிலும் இதற்கு அரசாங்கம்தான் காரணம் என்று முற்றுமழுதாக கூறிவிட முடியாது. எமது பட்டதாரிகளிடம் பிழையிருக்கின்றது.
அரசவேலை கிடைத்தால்தான் செய்வோம் மற்றபடி தனியார் கம்பனிகளிடம் வேலை செய்ய மாட்டோம் என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. ஆனால் தனியார் கம்பனிகளிலும் அதிகளாவான வேலைவாய்ப்புகள் இருக்கினறன அதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்நிலையினை தெளிவு படுத்தவேண்டும்.
11) யுத்தத்திற்கு பின்னர் தனியார் கம்பனிகள் வடக்கை ஆக்கிரமித்துள்ளன இதில் நீங்கள் தனியார் கம்பனிகளில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுத்திருக்கின்றீர்களா?
நிறையக் கம்பனிகளுக்கு எம்மிடமுள்ள தகவல்களைக் கொடுத்திருக்கின்றோம். தகைமையின் அடிப்படையில் இளைஞர்களின் தகவல்கள் எம்மிடம் இருக்கின்றன அதனை கம்பனிகளுக்கு அனுப்பியுள்ளோம்.
12)சுதந்திரக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக யார் வரக்கூடும்?
கடந்த சனிக்கிழமை வரைக்கும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டிருந்தது.இன்னமும் யார் வேட்பாளர் என்று முடிவுசெய்யப்படவில்லை வெகுவிரைவில் யார் வேட்பாளர் என்று அரசாங்கம் வெளியிடும்.
13) ஊடகங்களில் தயாமாஸ்டர் ஐக்கியமக்கள் சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடக்கூடும் என்று செய்திகள் வெளிவந்திருக்கின்றனவே?
தயாமாஸ்டரும் பதிவு செய்திருக்கின்றார் ஆனால் அவர்தான் என்று இன்னமும் முடிவு செய்யப்டவில்லை.
14)தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வரக்கூடுமா?
பொதுவாக எல்லா மாவட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜனாதிபதி செல்வது வழமை அதே மாதிரி யாழ்ப்பாணத்திற்கு நிச்சயமாக வருவார்.
15) தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு இணையாமை தொடர்பாக உங்கள் கருத்து?
தெரிவுக்குழுவில் இணைந்தாலே தங்களுடைய கருத்தை முன்வைக்கமுடியும். விடுத்து பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதனால் எதுவும் ஆகப்போவதில்லை அறிக்கை விட்டு அறிக்கைவிட்டு இன்று தமிழர்கள் இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம். அறிக்கை விடுவதை விடுத்து அதனை செயலில் காட்டவேண்டும். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைந்துகொள்வது முக்கியமானதாகும்.
16)யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் கல்வி,கலாச்சார நிலைமைகள் எவ்வாறு உள்ளன?
இளைஞர்கள் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று வழிமாறி, திசைமாறி செல்கின்றார்கள் இதனை சீர்படுத்தவேண்டும் நெறிப்படுத்தவேண்டும். இதனை பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் செய்யவேண்டும். ஒன்றே ஒன்றை மட்டும் என்னால் அடித்துக்கூறமுடியும் கல்வியால் மட்டுமே எங்களுடைய சமூகத்தை மேலே கொண்டுவர முடியும் அதற்கு பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பாக விழிப்பாக இருக்கவேண்டும.
17) விடுதலைப்புலிகளின் காலத்தில் காலாச்சாரம் என்பது பேணப்பட்டிருந்தது ஆனால் புலிகளின் தோல்விக்கு பின்னர் அது சிதைக்கப்ட்டுவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகின்றதே!!
விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் ஊரடங்குச் சட்டங்கள் இரவுவேளைகளில் அடிக்கடி போடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஐந்து ஆறு மணிக்குப் பிறகு வெளியில் நடமாடமுடியாது. குறிப்பாக இளைஞர்கள் பகல் வேளையிலே வெளியே நடமாடமுடியாத சுழ்நிலை காணப்பட்டது அந்த நேரத்தில் பிள்ளைகள் வீட்டில் இருந்து படித்தனர் கலாச்சாரம் பேணப்பட்டது. ஆனால் யுத்தம் முடிந்து சுதந்திரமாக நடமாடும் சுழ்நிலை தோற்றுவிக்கப்பட்டது இதனால் எதனையும் செய்யலாம் என்கின்ற நிலைமை உருவாகிற்று. தனிமனித சுதந்திரம் என்பது எங்களுக்குள் நாங்களே உருவாக்க வேண்டுமே அன்றி வேறோருவரால் கொண்டுவந்து திணிக்கமுடியாது.
நாங்கள் வழிகளைக் காட்டலாம் தட்டிக்கொடுக்கலாமே தவிர எங்களால் தனிமனித ஒழுக்கத்தை அவர்கள் மீத திணித்துக்கொள்ளமுடியாது. அவர்களே தங்களுள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக அவர்கள் இருந்ததால்தான் காப்பாற்றப்பட்டது காப்பாற்ற முடியவில்லை என்று கூறமுடியாது.