ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளராக விளங்கிய காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கம்பஹா, பள்ளி வீதியில் அமைந்துள்ள காலஞ்சென்ற அமைச்சரின் இல்லத்துக்கு தனது பாரியார் ஜயந்தியுடன் சென்று இறுதி அஞ்சலியை ஜனாதிபதி செலுத்தினார்.
சம்பந்தன் இரங்கல்
இதேவேளை, தேசிய அரசில் காணி அமைச்சராக செயற்பட்ட எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பல வருட காலமாக பழகிய நண்பனான அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் திடீர் மறைவை அறிந்ததும் நான் மிகவும் சோகத்திற்கு உள்ளானேன். திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து முதல் முதலில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவான குணவர்தன பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். எமது மாவட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒரே மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய குணவர்தனவுக்கும் எனக்கும் இடையே மிகவும் நெருக்கமான உறவு பேணப்பட்டு வந்தது.
நாட்டிலே ஏற்பட்ட அண்மைக்கால அரசியல் மாற்றத்திற்காக பாரியபங்களிப்புச் செய்தவர்களில் அன்னாரும் முக்கியமான ஒருவராக விளங்கினார். மிகவும் நேர்மையான முறையில் அரசியலில் பிரவேசித்த அன்னார் எப்போதும் மக்களுக்காககவே குரல் கொடுத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
முற்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட முக்கிய பணியொன்றின் காரணமாக ஈமச் சடங்கில் பங்கேற்க முடியாமையையிட்டு மனம் வருந்துகின்றேன். இத்துயர்மிக்க சந்தர்ப்பத்திலே இதயபூர்வமான கவலையை அன்னாரது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்று எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.