அமைச்சர்கள் நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்

‘அமைச்சர்கள் நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் மக்கள் சேவையின் போது குற்றச்செயல்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவர் மீது அவர் அமைச்சராக இருந்தாலும் அவருக்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் உறுதியான கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

may3-presedant

புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மக்கள் நம்பிக்கையை வெல்லக்கூடியவர்களாகவும், மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படக்கூடியவர்களாகவும் எச்சமயத்திலும் தமது பதவியையும்,அதிகாரத்தையும் விட்டுக்கொடுக்க தயாராக வேண்டுமென்றும் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்றைய தினத்தை இந்த நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக நான் கருதுகின்றேன். கடந்த 8ஆம் திகதி நாட்டின் சேவகன் என்ற வகையில் மக்கள் வாக்களித்து தேர்தலில் எம்மை வெற்றிபெறச் செய்தனர்.அதன்மூலம் மைத்திரி அரசாங்கமொன்றை அமைக்க முடிந்துள்ளது.

தேர்தலுக்கு முன்னர் நாம் அனைத்து மேடைகளிலும் புதிய அரசாங்கமொன்றை அமைப்போம் என்று மக்களிடம் தெரிவித்தோம். மக்கள் அதற்கான ஆசீர்வாதத்தை எமக்கு வழங்கியுள்ளனர். இதற்கிணங்க இன்று அமைச்சரவையொன்று நியமனம் பெறுகிறது. ஜனாதிபதியாக நானும் பிரதமராக ரணிலும் ஏற்கனவே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டோம்.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் இன்று நியமனம் பெற்றுள்ளனர். நான் இந்த அமைச்சர்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் சொல்ல விரும்புவது, எமது வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட அமைச்சரவையே இது.நூறு நாள் வேலைத்திட்டங்களையடுத்து நாம் பொதுத்தேர்தலொன்றுக்குச் செல்லவுள்ளோம்.

அதனூடான அமைச்சரவைமூலம் அமைக்கப்படுவதே நிரந்தர அரசாங்கமாகும். நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்குத் தெரிவித்த கொள்கைகளுக்கு இணங்கவும், நூறு நாள் வேலைத்திட்டத்தின் மூலமும் மேற்கொள்ளக்கூடிய பல விடயங்கள் உள்ளன. அதற்கான பொறுப்பை மக்களிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நாங்கள் இன்னும் நூறு நாட்களில் நாம் தேர்தலொன்றுக்குச் செல்லப்போகின்றோம் என்ற உறுதியான மனப்பாங்கோடு செயற்படுவது முக்கியமாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது வெற்றிக்குப் பங்களிப்புச் செய்யாத மக்கள் கட்சிகளின் ஆதரவாளர்கள் எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் போன்றோரை எங்களோடு நிரந்தர தோழமை உள்ளவர்களாக மாற்றவேண்டியது எமக்கான முக்கியமான பொறுப்பாகும். தேர்தலுக்குப் பின்னர் கடந்த இரண்டொரு தினங்களில் சில சில வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கேள்விப்பட நேர்ந்தது அதற்காக நான் வருத்தமடைகின்றேன்.

தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் இடம்பெற்றுள்ள வன்முறைகளில் சம்பந்தப்பட்டோர் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் யாருடைய ஆதரவாளராக இருந்தாலும், என்ன பதவியில் அவர் இருந்தாலும் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ள பொறுப்பை நாங்கள் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

நாங்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ளும்போது மக்கள் எம்மீது கொள்ளும் நம்பிக்கை அதிகரிக்கும். எவராவது வன்முறையில் ஈடுபட்டால் வேறு எவரையும் தம்மோடு இணைத்துக்கொள்ள முடியாமல் போகும். அதனால் பொதுமக்களின் மனதை அறிந்து நாம் செயற்படுவது அவசியமாகும். மக்களோடு சகோதரத்துவத்துடன் பழக வேண்டும்.

நாம் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதாகவே தேர்தலின் போது வாக்குறுதி அளித்தோம். அது தேசிய அரசாங்கமாக இருக்க வேண்டும். தேசிய அரசாங்கம் என்பது ஒரு கட்சிக்கு மாத்திரம் உரிய அரசாங்கம் இல்லையென்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வது மிக முக்கியமானது. அதற்கு அனைவரினதும் முன்மாதிரியான செயற்பாடு அவசியமாகும்.

அரசியல்வாதிகளை மோசமானவர்களாக மக்கள் நோக்கிய காலம் உள்ளது. அதற்கான பல காரணங்கள் உள்ளன. தமது செயற்பாட்டு முன்மாதிரியை மறந்தவர்களாக செயற்பட்டமையே இதற்குக் காரணம்.அதனால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது மிக முக்கியமானதாகும்.

நாம் 30 பேர் அடங்கிய அமைச்சரவையொன்றை அமைப்பதாகவே மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தோம். நாம் அதனை உறுதியாக நிறைவேற்றியுள்ளோம். அமைச்சர்கள் அமைச்சுப் பொறுப்புக்களைப் பொறுப்பேற்கும் போது தமக்குக் கிடைத்துள்ள பொறுப்புக்கள் போதாது என சிலர் நினைக்கலாம். தம்மீது இதைவிட கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கருதலாம்.

எனினும் இது ஒரு தற்காலிக வேலைத்திட்டம் என்பதை சகலரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.நான் ஒரு பெளத்தன் என்ற வகையில் பதவி மற்றும் அதிகாரத்தை எந்த நேரத்திலும் கைவிட்டுச் செல்லக் கூடிய மனோபாவம் அனைவருக்கும் முக்கியம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

நான் சுகாதார அமைச்சுப் பொறுப்பையும் பதவியையும்,சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியையும் பற்றிப்பிடித்துக்கொண்டு இருந்திருந்தால் நான் இன்னும் அந்த நிலையிலேயே இருந்திருப்பேன். அவற்றைக் கைவிட்டதால்தான் மக்கள் எனக்கு பெரும் பதவியொன்றை வழங்கியுள்ளனர்.

இன்று எமக்குக் கிடைக்கும் பதவி நாளை இல்லாமல் போகலாம் என சிந்தித்து செயற்படுவது முக்கியமாகும்.இந்த அமைச்சரவையில் உட்படுத்தாத மேலும் பல விடயங்கள் உள்ளன. அது தொடர்பில் நானும் பிரதமரும் எதிர்வரும் தினங்களில் அதற்கான தீர்மானங்களை எடுப்போம்.

மக்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை கெளரவமான முறையில் பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகும்.எப்போதும் முன்மாதிரியானவர்களாக செயற்படுங்கள்.

எமது அரசாங்கமும், நானும் பிரதமரும் எமது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் எவராவது ஒருவர் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டால் ஊழல் மோசடியில் ஈடுபட்டால் அவர் அமைச்சராக இருந்தாலும் சரி அதற்கு எதிராக செயற்படத் தயங்க மாட்டேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்’ எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

cabinet-1

cabinet-2

cabinet-3

Related Posts