தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சா் மனோ கணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகாி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவா்களை வைத்து வீதியை துப்பரவு செய்தமை தொடா்பில் பலா் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான விமா்சனங்களையும் முன்வைத்துள்ளனா்.
பூநகரி பிரதேசத்திலுள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் 5ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக, நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அமைச்சா் மனோ கணேசன் சென்றிருந்தாா். இதற்காக பாடசாலை மாணவா்களை வைத்து பாடசாலைக்கு செல்லும் வீதி துப்புரவு செய்யப்பட்டுள்ளது.
மழை பெய்து கொண்டிருந்த வேளையிலும் கூட மாணவா்கள் பாடசாலை சீருடையுடன் நின்று வீதியை துப்பரவு செய்துள்ளாா்கள். இதனை முன்னணி பிராந்திய ஊடகவியலாளா் ஒருவர் ஒளிப்படம் எடுத்துள்ளாா். எனினும் அப்புகைப்படத்தை வெளியிடவேண்டாமென சிலா் ஊடகவியலாளரை கேட்டுள்ளனா்.
எனினும் ஒரு அமைச்சரின் வருகைக்காக மாணவா்களை வைத்து வீதி துப்பரவு செய்தமை பாரிய பிழையென சுட்டிக்காட்டிய குறித்த ஊடகவியலாளா், அப்புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.