அமைச்சரவை கூட்டத்தில் இம்முறை பங்கேற்க முடியாது – முதலமைச்சர் சி.வி

Vickneswaran-cmஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களில் மாதத்தின் இறுதி வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாகாண முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்திலும் வியாழக்கிழமைகளில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றாலும் வாரத்தின் இறுதி வியாழக்கிழமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறே முதலமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுக்கு அமைச்சரவையின் செயலாளர் சுமித் அபேசிங்க எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

மாகாண அபிவிருத்தி குறித்த அமைச்சரவை பத்திரங்களை இதன் போது சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவைக் கூட்டங்களில் முதலமைச்சர்களை பங்கேற்குமாறு இதற்கு முன்னரும் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், அக்கூட்டத்தில் முதலமைச்சர்கள் பங்கேற்பது குறித்து முறையான வழிமுறைகளில் கடைப்பிடிக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இம்முறை நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் தன்னால் பங்கேற்க முடியாது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் கடந்த 11ஆம் திகதியே அறிவித்துள்ளார்.

Related Posts