அமெரிக்க வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு!!! 4 பேர் பலி!!

அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தில் வைத்தியசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

5 மாடிகளைக் கொண்ட வைத்தியசாலைக்குள் புகுந்த மர்ம நபர், சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி கொல்லப்பட்டுள்ளார்.

தம்பதி உள்பட 4 பேர் சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

வைத்தியசாலையின் ஒவ்வொரு அறையிலும் சோதனையில் ஈடுபடும் பொலிஸார் வேறேதும் கொலையாளிகள் உள்ளனரா என்றும் காயமடைந்தவர்களை மீட்டும் வருகின்றனர்.

அண்மைக்காலமாக தொடர்ந்து அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸ் நகரிலுள்ள உயர்நிலைப் பாடசாலை பட்டமளிப்பு விழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு வயோதிப பெண் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்தனர்.

இதேவேளை, கடந்த வாரம், டெக்சாஸில் உள்ள ஆரம்பப் பாசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 19 பாடசாலை சிறுவர்கள், 2 ஆசிரியைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் வன்முறையை சமாளிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், ஜனாதிபதி ஜோ பைடன் உடன் கலந்துரையாடினார்.

2019 இல் கிறிஸ்ட்சர்ச் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டதை பைடன் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நியூசிலாந்து அரசு இராணுவ பாணி துப்பாக்கிகளை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts